திருவாரூர்

குற்றங்கள் குறைய மக்களின் ஒத்துழைப்பு அவசியம்: எஸ்.பி. துரை பேச்சு

22nd Jul 2019 07:47 AM

ADVERTISEMENT

குற்றங்கள் குறைய வேண்டுமென்றால் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவைப்படுகிறது என்று திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். துரை கூறினார். 
திருவாரூரில் ஞாயிற்கக்கிழமை நடைபெற்ற போலீஸார், பொதுமக்கள் கலந்துரையாடும் விழிப்புணர்வு கூட்டத்தில்மேலும் அவர் பேசியது: காவல் துறை மக்களின் நண்பன் என்பதை அனைவரும் உணர வேண்டும். போலீஸாருக்கும், பொது மக்களுக்குமான இடைவெளி அதிகமாகவே உள்ளது. அவற்றை குறைத்து, நல்லுறவு ஏற்படுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
குடியிருப்பு பகுதிகளில் வீடு, கோயில், தெரு உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராவை அனைவரும் பொருத்த வேண்டும். இதன்மூலம் குற்றங்கள் நடைபெறுவது தடுக்க முடியும். நம்முடைய பகுதியை நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லை என்றால் போலீஸாரால் எதுவும் செய்ய முடியாது. எனவே, குற்றங்கள் குறைந்து, எங்கும் அமைதி நிலவ மக்களின் ஒத்துழைப்பு அவசியம். செல்லிடப்பேசிகளை குழந்தைகள் பயன்படுத்துவதால், பல்வேறு குற்றங்கள் தற்போது உருவாகத் தொடங்கியுள்ளன. எனவே, செல்லிடப்பேசிகளை எவ்வாறு நல்வழியில்  உபயோகப்படுத்துவது என்பதை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்றார் அவர். 
கூட்டத்தில் திருவாரூர் நகர்ப் பகுதிகளான  தென்றல் நகர், நியூ ஹவுசிங் யூனிட், சாது சுப்பையா நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT