மன்னார்குடி அருகே குடும்ப பிரச்னை காரணமாக 6 மாத கர்ப்பிணி செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
துண்டக்கட்டளை, புதுத்தெருவைச் சேர்ந்த தங்கையன் மகன் சக்திவேல் (27). சேரன்குளத்தைச் சேர்ந்த சுந்தரம் மகள் சுபா (23). இவர்களுக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு யாசிகா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது.
தற்போது சுபா ஆறுமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு சக்திவேல் மதுபோதையில் வீட்டுக்கு வந்தாராம். அப்போது, அவருக்கும், சுபாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், அருகிலிருந்தவர்கள் சமாதானம் செய்து வைத்தனர்.
இந்நிலையில், சக்திவேல் புதன்கிழமை காலையில் எழுந்து பார்த்தபோது மின்விசிறியில் சுபா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அவரது சாவில் மர்மம் இருப்பதாக மன்னார்குடி காவல் நிலையத்தில் சுபாவின் தந்தை புகார் அளித்தார். இதன்பேரில், சுபாவின் சடலத்தை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.