இந்து கோயில்களிலிருந்து தமிழக அரசு வெளியேற வேண்டும் என வலியுறுத்தி, மன்னார்குடியில் இந்து முன்னணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், செண்டலங்கார ஜீயர் கலந்துகொண்டார்.
கடந்த 60 ஆண்டுகளில் இந்து கோயில்களுக்குச் சொந்தமான ரூ. 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன. கோயில்களுக்குச் சொந்தமான இடம் மற்றும் நிலங்களுக்கு குத்தகையாக வரவேண்டிய வருமானம் ரூ. 5 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.120 கோடியாகக் குறைந்துவிட்டது. மாநிலம் முழுவதும் சுமார் 1, 700 சிலைகள் திருடப்பட்டு, அதற்குப் பதில் போலியான சிலை வைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. எனவே, கோயில்களிலிருந்து தமிழக அரசு வெளியேறி கோயில்களை இந்துக்களிடமே ஒப்படைக்க வேண்டும் என இந்து முன்னணியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, மன்னார்குடி மேலராஜவீதி பெரியார் சிலை அருகே இந்து முன்னணி நகரத் தலைவர் எஸ். மாரிமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மன்னார்குடி ஸ்ரீஅக்கோபிலா மடம் ஸ்ரீ செண்டலங்கார ராமானுஜ ஜீயர் கலந்துகொண்டார்.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பின் முன்னாள் தேசியச் செயலர் ஆர். ராஜ்குமார், இந்து முன்னணி மாவட்டச் செயலர் ப. ராமராஜசேகர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
இதில், இந்து முன்னணியின் மாவட்ட துணைத் தலைவர் என்.வி.ரமேஷ், மத்திய அரசின் வழக்குரைஞர் எஸ். விஜயன், சிவபக்தர் செ. செந்தமிழ்ச்செல்வன், நகர துணைத் தலைவர் வி. ராஜா, ஒன்றியச் செயலர் வி. விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.