திருவாரூர்

நிலத்தடி நீர் சேமிப்பு: மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்

12th Jul 2019 10:17 AM

ADVERTISEMENT

நீர் செறிவூட்டல் மற்றும் நிலத்தடி நீர் சேமிப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஜல்சக்தி அபியான் குழு கூடுதல் ஆணையர் (சிறு, குறு தொழில்துறை அமைச்சகம்) ப்யூஸ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவது தொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்குக்கு தலைமை வகித்து அவர் பேசியது:
    திருவாரூர் மாவட்டத்தில், நீர் செறிவூட்டல் மற்றும் நீர் சேமிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. நீர்  தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நிலத்தடி நீரை சேமிக்க வேண்டும். நீர் செறிவூட்டல் மற்றும் நிலத்தடி நீர்  சேமிப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நீரை மறுசுழற்சி முறையில்  பயன்படுத்த வேண்டும். மேலும் நீர் மேலாண்மை குறித்து திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை ஆய்வு  செய்ய உள்ளோம். இது தொடர்பான அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றார்.
 கூட்டத்துக்கு முன்னிலை வகித்து மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தெரிவித்தது:
  மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டத்தை திருவாரூர் மாவட்டத்தில் செயல்படுத்த உள்ளோம். மாவட்டத்தில் நீர் மேலாண்மை தொடர்பாக 5 வட்டாரங்கள் தேர்வு செய்யப்பட்டு, அடுத்த மூன்று மாதங்களில் நீர் செறிவூட்டுதல், நீர் சேமிப்பு உள்ளிட்டவை செயல்படுத்தப்பட உள்ளன. 
    இதையொட்டி, கடந்த இரண்டாண்டுகளில் நீர் மேலாண்மை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜல்சக்தி அபியான் குழுவினர் நீர் மேலாண்மை தொடர்பான தொழில்நுட்பங்களை நமக்கு கூறுவர். இதன்மூலம் எதிர் காலங்களில் நிலத்தடி நீரை சேமிப்பது தொடர்பாக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
   பின்னர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பொதுப்பணித்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை ஆகிய துறைகளில் மேற்கொண்டுள்ள நீர் மேலாண்மை தொடர்பான பணிகள் குறித்து ஜல்சக்தி அபியான் குழுவிடம் துறைவாரியாக விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. 
கூட்டத்தில், துணை செயலர் (எஃகு தொழில்துறை அமைச்சகம்) யு.கே.நாயர், இயக்குநர் (வனத்துறை மற்றும் பருவநிலை மாறுதல் அமைச்சகம்)  அசோக்குமார் பட்டீஸ்வரி, துணை இயக்குநர் (எஃகு தொழில்துறை அமைச்சகம்) என்.கே.சர்மா, துணை இயக்குநர் (பாதுகாப்புத்துறை அமைச்சகம்) சம்மர்த்து அகர்வால், தொழில்நுட்ப வல்லுநர் (வனத்துறை மற்றும் பருவநிலை மாறுதல் அமைச்சகம்) வெங்கடேஸ்வரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT