100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்க வேண்டும், இத்திட்டத்தில் நிகழும் குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் என்று கிராம மக்கள் வெள்ளிக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முத்துப்பேட்டை அருகேயுள்ள பின்னத்தூர் ஊராட்சியில் பரவலாக நூறு நாள் வேலை வழங்கிய நிலையில், ஊராட்சியில் நத்தம், மில்லடி, ஆள்காட்டுவெளி பகுதி மக்களுக்கு ஆண்டுதோறும் வழங்கும் பணி நிகழாண்டு வழங்கவில்லை. இந்நிலையில், ஜூன் 28-ஆம் தேதி கிராமசபா கூட்டம் நடைபெற போவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, இப்பகுதி மக்களுக்கு திடீரென்று முதல் நாள் ஜூன் 27-ஆம் தேதி நூறு நாள் வேலைப் பணி ஒன்றிய நிர்வாகம் வழங்கியது. அதன்பிறகு, ஒரு நாள் என தொடர்ந்து மூன்று நாள்கள் மட்டும் பணியை வழங்கிய ஊராட்சி நிர்வாகம் பிறகு பணி வழங்கவில்லையாம்.
இதுகுறித்து, ஊராட்சிச் செயலர் துரைமுருகானந்தம் கூறியது: இனி பணி கிடையாது என கூறியதால் அதிர்ச்சியடைந்த மேற்கண்ட மூன்று பகுதி பெண்கள், ஊராட்சி முன்னாள் தலைவர் டி. சுப்பையன், மகளிர் சுய உதவி குழு தலைவி சரோஜா ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் முத்துப்பேட்டை ஒன்றிய அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறை முன் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், உடனடியாக நூறு நாள் வேலை வழங்க வேண்டும், ஊராட்சிச் செயலர் துரைமுருகானந்தை பணியிடமாற்றம் செய்ய வேண்டும், ஊதிய நிலுவையை உடனடியாக வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினர். நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, முத்துப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பக்கிரிசாமி, கமலராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, செவ்வாய்க்கிழமை முதல் இப்பகுதியை சேர்ந்த அனைவருக்கும் நூறு நாள் வேலை வழங்கப்படும் என்று உறுதியளித்ததன்பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.