திருவாரூர்

"விவசாயிகளுக்கு ஏமாற்றமளிக்கும் நிதிநிலை அறிக்கை'

6th Jul 2019 01:05 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் நிதிநிலைஅறிக்கை விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியது: மத்திய அரசின் 2019 - 20-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்துள்ள அறிக்கை விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்ததற்கு விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்துவிட்டு விவசாயத் துறையில் தனியாரை அனுமதிக்கப்போவதாக அறிவித்துள்ளதை ஏற்க முடியாது. கடன் நெருக்கடியில் விவசாயிகளின் தற்கொலைகள் தொடரும் நிலையில் கடன் தள்ளுபடி மற்றும் நிவாரணம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் இடம் பெறாதது விவசாயிகளை மறைமுகமாக ஒடுக்க நினைக்கிறதோ அரசு என்று அஞ்ச தோன்றுகிறது. விவசாய உற்பத்தி பொருளுக்கு விலை நிர்ணயம் செய்வது, எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றுவது குறித்து எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை.
இந்தியா முழுவதும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 350 தாலுக்காவில் முற்றிலும் நிலத்தடி நீர் பறிபோய் விட்டதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், அதை மேம்படுத்துவதற்கு குறிப்பிட்டு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. நதி நீர் இணைப்பு திட்டம், புதிய நீர் பாசனத் திட்டங்கள், நதிகள் தேசியமயமாக்குவது குறித்த அறிவிப்பும் இல்லை. உள்நாட்டு நீர் வழிச் சாலைகள் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பு மட்டுமே உள்ளது.
காப்பீடு துறைகளில் 100 சதவீதம் தனியாரை அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பால் பயிர்க் காப்பீடுத் திட்டம் முற்றிலும் விவசாயிகளுக்கு பயனளிக்காது. ஒட்டு மொத்தமாக பெரும் முதலாளிகளுக்கான சலுகை நிறைந்த நிதிநிலை அறிக்கையாக உள்ளது. நிதி ஒதுக்கீடுகள் குறித்து வெளிப்படை தன்மை பின்பற்றப்படவில்லை. இதனால் மாநிலங்களுக்கு மாநிலம் நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டும் நிலை ஏற்படும். மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT