திருவாரூர்

கூத்தாநல்லூரில் குளங்கள் தூர்வாரும் பணி தொடக்கம்

6th Jul 2019 01:05 AM

ADVERTISEMENT

கூத்தாநல்லூர் பெரியப் பள்ளிவாசல் மிராசுதார் சங்க கட்டுப்பாட்டுக்குள் உள்ள குளங்கள் தூர்வாரும் பணி அண்மையில் தொடங்கியது.
இச்சங்க கட்டுப்பாட்டில் உள்ள அல்லிக்கேணி குளம், பெரியப் பள்ளிவாசல்  நிர்வாகிகளின் மேற்பார்வையில் அண்மையில் தூர்வாரும் பணி தொடங்கியது. 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட அல்லிக்கேணி குளத்தில் 15 டிராக்டர்கள், 3 பொக்லைன், ஊதியத்துக்கு 20 பேர், சமூக ஆர்வலர்கள் 10 பேர் என 6 நாள்களாக தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெற்று 
வருகிறது.
இதுகுறித்து, பெரியப் பள்ளிவாசல் மிராசுதார் சங்க நிர்வாகி திமீஜீதீன் கூறியது: சங்க கட்டுப்பாட்டில், செயற்தான்கேணி, அல்லிக்கேணி, அஞ்சுக்கேணி, பெரியக்குளம், சம்பாக்கேணி மற்றும் கிச்சடிக்குட்டை உள்ளிட்ட 6 குளங்கள் உள்ளிட்ட மேலும் 4 குளங்களுடன் மொத்தம் 10 குளங்கள் பள்ளிவாசல்களின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஊருக்கு மத்தியில் அமைந்துள்ள இக்குளங்களை, பெரியப் பள்ளிவாசல் மிராசுதார் சங்கம் 1940-ஆம் ஆண்டு 79 ஆண்டுகளுக்கு முன்பே ஆண்கள், பெண்கள் குளிப்பதற்கு தனித்தனியாக 2 குளங்களும், கால்நடைகளை குளிப்பாட்டுவதற்காக தனியாக ஒரு குளம் என பிரிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. 
நீர்நிலைகளைக் காப்பதற்காக குளங்களை தூர்வார முடிவு செய்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த. ஆனந்தின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவரது உத்தரவின்பேரில் தற்போது தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குளத்திலிருந்து எடுக்கப்படும் மண் விவசாய நிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், நிலத்தடி நீரை சேமித்து வைக்க குளத்தின் நடுவே 100 அடி ஆழத்துக்கு குழாய் அமைத்து ஜல்லிகள் நிரப்பட்டு நீராதாரம் மேம்படுத்தப்பட உள்ளன. அல்லிக்கேணியைத் தொடர்ந்து 10 குளங்களும் தூர்வாரப்பட உள்ளன என்றார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT