திருவாரூர்

நீடாமங்கலத்தில் மேம்பாலம்: மக்கள் பிரதிநிதிகள் குரல் எழுப்ப வலியுறுத்தல்

4th Jul 2019 08:44 AM

ADVERTISEMENT

நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க மக்கள் பிரதிநிதிகள் குரல் எழுப்ப வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை அதிகாலை சென்னையிலிருந்து மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலும், அதைத்தொடர்ந்து மன்னையிலிருந்து திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலும் வந்து சென்றன. இந்த இரு ரயில்களுக்காகவும் ரயில்வே கேட் மூடி திறக்கப்பட்டது. பின்னர் காலை 6.30 மணிக்கு நீடாமங்கலம் ரயில்வே கேட் மீண்டும் மூடப்பட்டது. அப்போது, காரைக்கால் பயணிகள் ரயில் சென்றவுடன் சரக்கு ரயில் பெட்டிகள் இணைப்புப் பணி நடைபெற்றது. 
இதனிடையே, மானாமதுரை பயணிகள் ரயில் வந்து சென்றது. கோவை செம்மொழி விரைவு ரயில் என்ஜின் திசை மாற்றும் பணி நடந்தது. சரக்கு ரயில், கோவை செம்மொழி விரைவு ரயில் சென்ற பிறகு சுமார் 8 மணிக்கு ரயில்வே கேட் திறக்கப்பட்டது. இதன் காரணமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நெடுஞ்சாலைப் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால், காலை வேளையில் நெடுஞ்சாலை பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். அதன் பின்னரும் ரயில்கள் வருகைக்காக ரயில்வே கேட்டுகள் மூடப்பட்டன. நெடுஞ்சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர்.
மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்: நீடாமங்கலத்தில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியைத் தவிர்த்திடும் வகையில், மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தும் இதுவரை அதற்கான பணிகள் தொடங்கவில்லை. எனவே, மக்கள் நலன் கருதி மேம்பாலம் அமைக்கும் பணியைத் தொடங்கிட மத்திய, மாநில அரசுகளை மக்கள் பிரதிநிதிகள் தஞ்சை மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம், மன்னார்குடி எம்.எல்.ஏ., டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் வலியுறுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT