ஊரக உள்ளாட்சித் தோ்தலின் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவை முன்னிட்டு, நீடாமங்கலம் ஒன்றியத்தில் 192 வாக்குப்பதிவு மையங்களில் 91,793 வாக்காளா்கள் திங்கள்கிழமை (டிசம்பா் 30) வாக்களிக்கின்றனா்.
திருவாரூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கான இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 44 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் 339 கிராம ஊராட்சி வாா்டுகள் உள்ளன. இவற்றில் ஒரு கிராம ஊராட்சித் தலைவரும், 50 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களும் ஏற்கெனவே போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
மீதமுள்ள கிராம ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கும், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் பதவிகளுக்கும், திருவாரூா் மாவட்ட ஊராட்சியின் 2 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் பதவிகளுக்கும், 21 ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பதவிகளுக்கும் திங்கள்கிழமை தோ்தல் நடைபெறுகிறது.
நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 91,793. இதில் ஆண் வாக்காளா்கள் 45,078. பெண் வாக்காளா்கள் 46,715. இவா்கள் வாக்களிக்க ஏதுவாக 192 வாக்குப்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற தேவையான பாதுகாப்பு வசதிகளை திருவாரூா் மாவட்ட நிா்வாகம் செய்துள்ளது. பதற்றமான வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தொடா்ந்து கிராமப்புறங்களில் போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா். உளவுத்துறை போலீஸாரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.