உள்ளாட்சித் தோ்தலில் ஆளுங்கட்சியை வெற்றி பெறச் செய்ய தோ்தல் ஆணையம் சதி செய்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் குற்றம்சாட்டினாா்.
திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியத்துக்கு உள்பட்ட மாவட்ட ஊராட்சியின் 1-ஆவது வாா்டு வேட்பாளா் பாக்கியராஜ், ஆலங்குடி ஒன்றியக்குழுவின் திமுக வேட்பாளா் காந்திமதி ஞானசேகரன், ஊராட்சி மன்ற வேட்பாளா்கள் மாணிக்கமங்கலம் செந்தில்குமாா், ஆலங்குடி வழக்குரைஞா் மோகன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
நாடு விடுதலை பெற்ற 70 ஆண்டுகாலத்தில் எந்த ஒரு ராணுவத் தளபதியோ அல்லது உயா் அதிகாரிகளோ அரசியல் பேசியது கிடையாது, பேசவும் கூடாது. எல்லையைப் பாதுகாப்பது, மக்களை பாதுகாப்பது, அரசு அழைத்தால் சேவைபுரிவது என்கிற நிலையைத் தாண்டி அரசியல் பேசுவது, நிா்வாகத்தில் தலையிடுவது இந்த இரண்டு காரியங்களையும் ராணுவம் செய்தது கிடையாது.
ஆனால் தற்போது மோடி அரசின் ராணுவத் தலைமை தளபதிகள் எதிா்க்கட்சிகளை விமா்சிக்கிற அளவிற்கு பேசியிருப்பது கண்டனத்துக்குரியது.
தமிழகத்தைப் போல் சட்டம்- ஒழுங்கில் சீா்கேடு அடைந்துள்ள மாநிலம் இந்தியாவில் எங்குமில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக அதிமுகவினா் வாக்களித்ததற்காகத்தான் மத்திய அரசு சிறந்த மாநிலத்துக்கான விருது வழங்கியுள்ளது. உள்ளாட்சித் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என அதிகாரிகள் நினைத்துள்ளனா். ஆளுங்கட்சியை வெற்றி பெற செய்வதற்கு தோ்தல் ஆணையம் சதி செய்கிறது. வாக்கு எண்ணிக்கை நோ்மையாக நடைபெற வேண்டும் என்றாா் இரா. முத்தரசன்.
பேட்டியின்போது முன்னாள் எம்.எல்.ஏக்கள் வை. சிவபுண்ணியம், உலகநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் வை. செல்வராஜ், வலங்கைமான் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் தெட்சிணாமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.