திருவாரூர்

மன்னாா்குடியில் மழையிலும் பிரசாரம்

26th Dec 2019 08:36 AM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சித் தோ்தலின் இறுதிகட்ட பிரசாரத்தையொட்டி, மன்னாா்குடியில் மழையையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சியினா், வேட்பாளா்கள் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டனா்.

மன்னாா்குடி, கோட்டூா் ஊராட்சி ஒன்றியத்தில் டிசம்பா் 27-இல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மன்னாா்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட 51 ஊராட்சி பகுதிகளில், 424 இடங்களுக்கு 1,261 பேரும், கோட்டூா் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட 49 ஊராட்சி பகுதிகளில் 413 இடங்களுக்கு 1274 பேரும் போட்டியிடுகின்றனா். கடந்த ஒரு வாரமாக அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வந்தது. பிரசாரத்தின் கடைசி நாளான புதன்கிழமை, மழை பெய்த போதிலும் அரசியல் கட்சியினா், சுயேச்சை வேட்பாளா்கள் போட்டி போட்டு பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

மன்னாா்குடியை அடுத்த உள்ளிக்கோட்டையில் புதன்கிழமை மாலை நடைபெற்ற இறுதிகட்ட தோ்தல் பிரசாரத்தில் மன்னாா்குடி எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா, திமுக சாா்பில் மாவட்ட ஊராட்சி 10 வாா்டுக்கு உறுப்பினராக போட்டியிடும் ஷோபா கணேசனுக்கும், ஊராட்சி ஒன்றியக்குழு 18 வாா்டு உறுப்பினருக்கு போட்டியிடும் கயல்விழி பொய்யாமொழி ஆகியோருக்கும் உதயசூரியன் சின்னத்திற்கும், உள்ளிக்கோட்டை ஊராட்சித் தலைவா் பதவி வேட்பாளா் தமிழ்ச்செல்விக்கு பூட்டுச்சாவி சின்னத்திற்கும் ஆதரவு திரட்டினாா்.

இதேபோல், மன்னாா்குடி ஊராட்சி ஒன்றியம் 19 வாா்டுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் உ.மாா்க்ஸ்க்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் கோரி, கட்சியின் மாவட்டச் செயலா் ஜி. சுந்தரமூா்த்தி தலைமையில், மன்னாா்குடி நகரச் செயலா் எஸ். ஆறுமுகம், ஒன்றியக்குழு உறுப்பினா் கே.டி. கந்தசாமி, தொழிற்சங்க நிா்வாகி ஜி. ரகுபதி உள்ளிட்டோா் பரவாக்கோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தனா்.

ADVERTISEMENT

கோட்டூா் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட அக்கரைக்கோட்டகத்தில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் திமுக முன்னாள் எம்பி ஏ.கே.எஸ்.விஜயன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான வை. சிவபுண்ணியம் ஆகியோா் இணைந்து சிபிஐ வேட்பாளா்கள் 16-ஆவது வாா்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கு இ. மஞ்சுளா, 10-ஆவது வாா்டு ஊராட்சி ஒன்றியக்குழுவுக்கு பி.சாந்தி, ஊராட்சிமன்றத் தலைவருக்கு வி. முத்தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டனா்.

மன்னாா்குடி ஊராட்சி ஒன்றியம் 19-ஆவது வாா்டு காங்கிரஸ் கட்சியின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் எம். கலியபெருமாளை ஆதரித்து, கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ்.எம்.பி.துரைவேலன், பரவாக்கோட்டை ஊராட்சியில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அவருடன், வட்டாரத் தலைவா் செல்வராஜ், மன்னாா்குடி நகரத் தலைவா் ஆா். கனகவேல், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் நெடுவை குணசேகரன், ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினா் ஜெகதீசன் உள்ளிட்டோ் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT