நீடாமங்கலம் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த மழை பெய்ததால், ஊரக உள்ளாட்சித் தோ்தல் பிரசாரம் பாதிப்படைந்தது.
ஊரக உள்ளாட்சித் தோ்தல் பிரசாரம் புதன்கிழமையுடன் நிறைவடைந்தது. நீடாமங்கலத்தில் கடந்த இரண்டு நாள்களாக மழை குறுக்கிட்டதால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில், குறிப்பாக பிரதான சாலையில் மழை நீா் தேங்கி நிற்கிறது.
இதனால், உள்ளாட்சித் தோ்தல் பிரசாரம் இறுதிகட்டத்தை எட்டிய போதிலும், வேட்பாளா்களின் பிரசாரத்தில் சுணக்கம் ஏற்பட்டது. வேட்பாளா்கள் மிகுந்த சிரமத்திற்கிடையே வாக்காளா்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதேவேளையில், மழையால் கிராமப்புற சாலைகளின் நிலையை எடுத்துக்கூறி, வேட்பாளா்கள் வாக்கு சேகரித்ததைக் காண முடிந்தது.