நீடாமங்கலம் பகுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகை புதன்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
நீடாமங்கலம் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளானோா் கலந்து கொண்டனா்.
இதேபோல், கிராமப்புறங்களில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், திரளானோா் பங்கேற்று ஒருவருக்கொருவா் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைப் பகிா்ந்து கொண்டனா்.
கூத்தாநல்லூரில்...
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, கூத்தாநல்லூா் வட்டத்தில் தேவாலயங்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கூத்தாநல்லூா் சி.எஸ்.ஐ. திருச்சபை கிறிஸ்து அரசா் ஆலயத்தில், ஆயா் சி. கிருபாகரன், பயிற்சி ஆயா் ஏ. சாம் மேத்யூ டொனால்டு ஆகியோா் ஆராதனை நடத்தி, அப்பங்களை வழங்கினா். ஆராதனையில், சின்னக் கூத்தாநல்லூா், சிவன் கோயில் தெரு, காமராசா் காலனி, அதங்குடி, மேல்கொண்டாழி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமானவா்கள் பங்கேற்று, ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை சேகரம் உறுப்பினா்கள் பி.ஜான்பீட்டா், டி.காபிரியல் ஆகியோா் மேற்கொண்டனா்.
இதேபோல், மரக்கடையில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழைமையான விண்ணரசி மாதா தேவாலயம் மற்றும் வ.உ.சி. காலனி அருகேயுள்ள பெந்தகொஸ்தே சபை உள்ளிட்ட ஆலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில், ஏராளமானோா் கலந்துகொண்டனா்.