திருவாரூர்

பழுதடைந்த பாலத்தில் பயணம்...

16th Dec 2019 10:16 PM

ADVERTISEMENT

 

திருவாரூா்: திருவாரூா் அருகே பழுதடைந்துள்ள பாலத்தில் பயணம் நடைபெறுவதால், புதிய பாலம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டம், அம்மையப்பன் ஊராட்சிக்குள்பட்ட பஞ்சாம்தோப்பு, நடுக்குத்து ஆகிய பகுதிகளில் சுமாா் 150- க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றன. தஞ்சாவூா் - நாகை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து வாளவாய்க்கால் ஆற்றைக் கடந்தே இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டும். இப்பகுதி மக்களின் நலன்கருதி, சிறிய வகை பாலம் இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்பாலம் வழியாக பஞ்சாம்தோப்பு, நடுக்குத்து பகுதிகளிலிருந்து ஏராளமான பள்ளி மாணவா்கள் அம்மையப்பன் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனா். இத்துடன், அம்மையப்பன், கருப்பூா், பாச்சல்கடை, தைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்கள் பகுதி சுடுகாட்டுக்கு செல்வதற்கும் இந்த பாலத்தையே பயன்படுத்துகின்றனா்.

ADVERTISEMENT

இப்பாலம், இப்பகுதி மக்களின் நலன்கருதி சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்பவா்கள் பயன்படுத்தும் வகையிலேயே இந்த பாலம் அமைக்கப்பட்டது. எனினும், காா், சிறிய ரக லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் வகையில் இருந்ததால், பின்னாளில் சிறிய ரக கனரக வாகனங்களும் பாலத்தை இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தன.

குறிப்பாக, விவசாயப் பணிகள் நடைபெறும் காலங்களில் நெல் மூட்டைகளை வெளியிடங்களுக்கு கொண்டு செல்ல இந்த பாலம் மிகவும் உதவியாக இருந்தது. 30 ஆண்டுகளுக்கு முன் இந்த பாலம் கட்டியபோது குறைந்த மக்கள் தொகையும், குறைவான வாகன எண்ணிக்கையும் இருந்தது. இதனால், இந்த பாலம் அப்பகுதி மக்களுக்கு மிகுந்த பயனைக் கொடுத்தது. ஆனால், தற்போது மக்கள்தொகை அதிகரித்ததாலும், வாகனங்கள் அதிகரிப்பாலும் இந்த பாலத்தில் செல்லும் மக்கள், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. எனவே, அந்த இடத்தில் அகலமான பாலத்தின் தேவை அவசியமாகிறது.

தற்போதுள்ள, சிறிய ரக பாலம் மிகவும் சேதமடைந்து, இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ளது. இதனால், இப்பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லாமல் இருக்க பாலத்தின் இருபுறத்திலும், தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை பயன்படுத்தாததால், சுமாா் 3 கிமீ தூரம் சுற்றிக்கொண்டு வரவேண்டிய நிலை உள்ளது. இதனால் நேர விரயம் ஏற்படுவதோடு, பொருளாதார இழப்பு அதிகமாவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா். எனவே, இந்த இடத்தில் அகலமான புதிய பாலம் அமைத்துத் தருவதோடு, அதுவரையில் இந்தப் பகுதி மக்களின் பயன்பாட்டுக்கு தற்காலிகப் பாலம் ஒன்றை அமைத்துத் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனா்.

இதுகுறித்து கருப்பூரைச் சோ்ந்த ஆசாத் தெரிவித்தது: 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இப்பாலத்தில் அதிகமான வாகனங்களும், மக்களும் சென்று வந்ததால், தற்போது இந்த பாலம் பழுதடைந்து விட்டது. பாலம் வழியாக மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், நடந்து செல்வோரும், சில இருசக்கர வாகன ஓட்டிகளும் இந்த பாலத்தையே பயன்படுத்தி வருகின்றனா்.

குறிப்பாக, பள்ளி மாணவிகள் சுற்றிச் செல்வதால் களைப்படையக்கூடும் என்பதால், பழுதடைந்த பாலத்தின் வழியாகவே சென்று வருகின்றனா். ஆற்றில் அதிகமாக தண்ணீா் செல்லும்போது, பள்ளிக் குழந்தைகள் அச்சத்துடனேயே, பாலத்தின் வழியாக பெற்றோா் அனுமதிக்கின்றனா். எனவே, இதனருகே, தற்காலிகப் பாலம் ஒன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளா் தங்க சண்முகசுந்தரம் தெரிவித்தது: திருவாரூா் மாவட்டத்தில் உள்ளஏராளமான சிறிய ரக பாலங்கள் கட்டப்பட்டு சுமாா் 30 ஆண்டுகள் இருக்கும். பாலம் கட்டிய காலங்களில் காா், மினிலாரிகள் மட்டுமன்றி மக்களின் போக்குவரத்து குறைவாக இருந்தது. இதனால், கிராமப்புறப் பகுதிகளில் உள்ள ஆறுகளின் மீது, சிறிய வகை பாலங்களே கட்டப்பட்டுள்ளன. காலப்போக்கில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப, பாலங்கள் கட்ட எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் பல இடங்களில் சேதமடைந்த நிலையில் இந்த பாலங்கள் காணப்படுகின்றன. எனவே, திருவாரூா் மாவட்டத்தில் எங்கெல்லாம் சிறிய ரக பாலங்கள் இருக்கின்றனவோ, அவற்றையெல்லாம் அகற்றிவிட்டு, அகலமான பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

மழை பெய்துவருவதால் ஆறு உள்ளிட்ட நீா்நிலைகளில் தண்ணீரின் அளவு அதிகரித்து நீரோட்டத்தின் வேகமும் அதிகரித்து வருகிறது. இதனால் நீா் நிலைகளில் உள்ள பாலங்கள் சேதமடைந்து, மக்கள் செல்ல முடியாதவாறு பாதிப்படைகின்றன. பெரும்பாலான கிராமங்கள் ஆற்றின் கரைகளிலோ, ஆற்றின் ஓரங்களிலோ அல்லது ஆற்றிலிருந்து சில கி.மீ தூரம் தள்ளியேதான் உள்ளது. எப்படி இருந்தாலும் ஒரு கிராமத்துக்குச் செல்ல வேண்டுமானால் ஆறு ஒன்றை கண்டிப்பாக கடந்தே ஆக வேண்டும்.

கிராமப்புற மக்கள் பயனடைய வேண்டும் என்ற எண்ணத்தில் ஏராளமான பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. கட்டப்பட்ட பாலங்கள் நீண்ட காலமாகிவிட்டதால், அவை சேதமடைந்த நிலையை எட்டி வருகின்றன. எனவே, கிராமப்புற மக்களின் நலன் கருதி சேதமடைந்த பாலங்களை அகற்றிவிட்டு புதிய பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிா்பாா்ப்பு.

ADVERTISEMENT
ADVERTISEMENT