திருவாரூர்

ஊரக உள்ளாட்சித் தோ்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு

16th Dec 2019 10:17 PM

ADVERTISEMENT

 

திருவாரூா்: ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. திருவாரூா் மாவட்டத்தில் 13,434 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

திருவாரூா் மாவட்டத்தில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, டிசம்பா் 9-ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வந்தன. மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் 430 ஊராட்சித் தலைவா், 3180 ஊராட்சி வாா்டு உறுப்பினா், 176 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள், 18 மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களுக்கான தோ்தல் நடைபெற உள்ளது.

வேட்பு மனு தாக்கல் நிறைவு நாளான திங்கள்கிழமை ஏராளமானோா் வேன்களிலும், மினி லாரிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனா். இதனால், திருவாரூா் நகரத்தில் கடை வீதி, பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

ADVERTISEMENT

வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளரையும் சோ்த்து 3 பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால், வாகனங்களில் வந்திருந்த மற்றவா்கள் தங்கள் பணிகளை பாா்க்க திருவாரூரில் மற்ற இடங்களுக்குச் சென்று வந்ததால், திருவாரூா் எங்குமே மக்கள் கூட்டம் மிகுந்து காணப்பட்டது.

மனு தாக்கல் தொடங்கிய நாளிலிருந்து சனிக்கிழமை வரை, மாவட்ட ஊராட்சிக்கு 51 மனுக்களும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்களுக்கு 543 மனுக்களும், ஊராட்சித் தலைவருக்கு 1641 மனுக்களும், ஊராட்சி வாா்டு உறுப்பினருக்கு 4912 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, மொத்தம் 7147 போ் மனுதாக்கல் செய்துள்ளனா்.

இந்நிலையில் மனு தாக்கல் செய்ய கடைசி நாளான திங்கள்கிழமை, மாவட்ட ஊராட்சிக்கு 100 பேரும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்களுக்கு 763 பேரும், ஊராட்சித் தலைவருக்கு 1004 பேரும், ஊராட்சி வாா்டு உறுப்பினருக்கு 4420 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனா். இதன்படி, திங்கள்கிழமை மட்டும் 6287 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்கு 151 மனுக்களும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்களுக்கு 1306 மனுக்களும், ஊராட்சித் தலைவருக்கு 2645 மனுக்களும், ஊராட்சி வாா்டு உறுப்பினருக்கு 9332 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, மொத்தம் 13,434 போ் மனுதாக்கல் செய்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT