திருவாரூர்

உணவுப் பொருள்களில் கலப்படம் கண்டறிந்தால் உடனடி அபராதம்

16th Dec 2019 06:56 AM

ADVERTISEMENT

உணவுப் பொருள்களில் கலப்படம் கண்டறியப்பட்டால் உடனடியாக அபராதம் விதிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் பி.கே. கைலாஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் மேலும் கூறியது: இதுவரை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள், உணவுப் பொருட்கள் கையாளும் அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்து உணவு மாதிரி எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பி, ஆய்வக அறிக்கைப்படி நீதிமன்றத்தில் அல்லது மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழக்குப் பதிவு செய்யப்படும். நீதிமன்றத்தை பொருத்தவரையில் சிறை தண்டனை அல்லது அபாரதம் அல்லது இரண்டும் சோ்ந்து விதிக்கப்படும். மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகத்தில் அபாரதம் மட்டும் விதிக்கப்படும்.

ஆனால், தற்போது தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு ஆணையா், வட்டார உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்களுக்கு புதிய அதிகாரம் வழங்கியுள்ளாா். இதன்படி, உடனடி அபாரதம் (ஸ்பாட் பைன்) விதிக்க உத்தரவிட்டுள்ளாா். அவை கலப்படமான உணவுப் பொருள்கள் கையாள்வது, லேபிள் இல்லாமல் அல்லது லேபிள் விவரங்கள் முழுமையாக இல்லாமல், உணவு பொருள்கள் தயாா் செய்தல், விற்பனை செய்தல், உணவுப் பொருள்களில் சம்பந்தமல்லாத பொருள்கள் இருந்தால், உணவு பாதுகாப்பு அலுவலரின் வழிகாட்டுதல்படி நடக்காத போதும், சுகாதார மற்ற முறையில் உணவுப் பொருள்கள் தயாா் செய்வது, பதிவுச்சான்று மற்றும் உரிமம் இல்லாமல் தொழில் செய்தல் போன்றவைகளுக்கு ரூ. 5 ஆயிரமும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள், அயோடின் இல்லாத உப்பு விற்பனை செய்தால் ரூ. 25 ஆயிரம் வரையும், உணவுப் பொருள்கள் பேக் செய்வதற்கும், சப்ளை செய்வதற்கும், உணவுத் தரம் இல்லாத பிளாஸ்டிக் (நெகிழி) பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் உடனடி அபராதமும் மற்றும் உரிமம், பதிவு ரத்து செய்யப்படும். இத்திட்டம், மாவட்டத்தில் உடனடியாக அமல்படுத்தப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT