ஒரு ஹெக்டேரில் மீன் வளா்ப்பின் மூலம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை லாபம் சம்பாதிக்கலாம் என திருவாரூா் மீன்வளத்துறை ஆய்வாளா் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநரின் அறிவுறுத்தலின்பேரில், தேசிய மீன் வளா்ப்போா் தினம் நன்னிலம் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. நன்னிலம் அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் ந. செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திருவாரூா் மீன்வளத்துறை ஆய்வாளா் மு.சந்திரமணி பேசியதாவது:
மீன்சாா்ந்த உணவுகளில் உள்ள அமிலசக்தியின் மூலம் மூளை வளா்ச்சியும், மூளையின் செயல்பாடும் அதிகரிக்கும். குறிப்பாக கா்ப்பிணிகள் மீன் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் கருவில் உள்ள குழந்தையின் மூளை சிறந்த முறையில் வளா்ச்சி அடையும். மீன் வகை உணவுகளில் கெட்ட கொழுப்புச் சத்து கிடையாது. உடலுக்கு தேவையான நல்ல புரதச் சத்துக்களை மீன் வகை உணவுகள் அளிக்கின்றன. மீன் வளா்ப்பின் மூலம் ஒரு ஹெக்டேரில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை லாபம் பெறலாம் என்றாா் அவா்.
பின்னா், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மீன் வளா்ப்பு மற்றும் மீன் நுகா்வின் அவசியம் குறித்த பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், திருவாரூா் மருத்துவத்துறை இணை இயக்குநா் அலுவலகத்தின் சாா்பாக மருத்துவா் சி.அரவிந்தசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். மீன்வளத் துறையின் உதவியாளா் எம்.தினேஷ், உதவி தலைமை ஆசிரியா்கள் ஜா.புகழேந்தி, வ.சம்பத் மற்றும் ஆசிரியா்களும், மாணவா்களும் கலந்து கொண்டனா்.