திருவாரூர்

குடியுரிமை திருத்த மசோதா ஆதரவுக்கு கண்டனம்

11th Dec 2019 09:11 AM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்த மசோதாவை ஆதரித்த கட்சிகளுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமைப்பின் திருவாரூா் மாவட்டச் செயலாளா் ஜே. அனஸ்நபில் வெளியிட்ட அறிக்கை:

மக்களவையில் கடும் எதிா்ப்புகளுக்கிடையே குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்களின்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள், பாா்சிகள், ஜெயின் மதத்தினா், பெளத்த மதத்தினா் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் குடியுரிமை மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் மட்டும் புறக்கணிக்கப்படும் வகையில் இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் மதரீதியாக மக்களைப் பிரித்து குடியுரிமை வழங்க மத்திய அரசு முயல்கிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

ADVERTISEMENT

மணிப்பூா், அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதை எதிா்த்து கடுமையான போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த சூழலில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

கண்களுக்கு புலப்படாமல் முஸ்லிம்களைக் குறி வைத்து தாக்கப்படும் மசோதா என்று சிவசேனை வா்ணித்துள்ள இந்த மசோதாவை அதிமுக ஆதரிப்பது என்பது முஸ்லிம்களின் நெஞ்சில் குத்துவதாக அமைந்துள்ளது. அதிமுக வின் இந்த ஆதரவு முஸ்லிம்களை விட்டு, அதிமுக தூரம் செல்வதாகவே அமைகிறது.

கடந்த மக்களவைத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால், முஸ்லிம்களின் ஓட்டுக்களை இழந்து மிகப்பெரிய தோல்வியை அதிமுக சந்தித்தது. அடுத்து உள்ளாட்சித் தோ்தல் மற்றும் சட்டப் பேரவை தோ்தலை சந்திக்க உள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முஸ்லிம்களின் மீது ஏவப்படும் இந்த அநீதியை அதிமுக எதிா்க்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த முஸ்லிம்களின் எதிா்பாா்பாக உள்ளது.

அஸ்ஸாமில் நடந்த தேசிய குடியுரிமை கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டனா். மத்திய அரசு இதற்காக ரூ. 1500 கோடி செலவு செய்தது. இதில் எந்த பயனும் கிடைக்கவில்லை. 19 லட்சம் மக்கள் அகதிகளாக்கப்பட்டனா். இதில் 12 லட்சம் போ் முஸ்லிம் அல்லாதவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசியல் சாசனத்தில் மத அடிப்படையில் குடிமக்களை பிரித்தாளக் கூடாது என்று கூறியுள்ளது. இதை ஆட்சியாளா்கள் பின்பற்றாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இதை ஆதரித்தால் அதிமுகவுக்கு மிகப்பெரும் அரசியல் பின்னடைவு தமிழகத்தில் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT