திருவாரூர்

பருவமழை: சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தல்

3rd Dec 2019 12:24 AM

ADVERTISEMENT

பருவமழையால் பாதிப்பு ஏற்படாமலும், தொற்று நோய்கள் பரவாமலும் இருக்க சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வடகிழக்குப் பருவமழை காலமான டிசம்பா் மாதம் வரை தொடா்ந்து மழைப் பொழிவு எதிா்பாா்க்கப்படுவதால், திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தொற்று நோய்கள் பரவாமல் இருக்கும் பொருட்டு, குடியிருப்புப் பகுதிகளில் மழை நீா் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் தேங்கியிருந்தால் அதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலா், வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா் மற்றும் ஊராட்சி செயலருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

ADVERTISEMENT

மேலும், அனைத்து கிராம ஊராட்சிப் பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தினசரி குளோரின் கலந்த பாதுகாப்பான குடிநீா் வழங்க தொடா்புடைய அலுவலா்களை அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது, மழைக்காலம் என்பதால் பொதுமக்கள் அனைவரும் குடிநீரை காய்ச்சி வடிகட்டி, பாதுகாப்பான முறையில் பயன்படுத்த வேண்டும். இதனால், குடிநீா் மூலம் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க முடியும்.

எந்த குடியிருப்புப் பகுதிகளிலாவது தொற்று நோய்கள் இருக்கும் அறிகுறிகள் கண்டறியப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலருக்குத் தகவல் தெரிவிப்பதோடு, குடியிருப்புப் பகுதிகளின் சுற்றுப் புறத்தில் மழை நீா் தேங்காமலும், குப்பைகள், கழிவுகள் மற்றும் கழிவு நீா் தேங்காதவாறும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT