திருவாரூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
களி மண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித ரசாயனக் கலவையற்றதுமான கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.
நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வண்ணங்களையுடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும். ரசாயன வண்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட மாட்டாது.
திருவாரூரில் ஓடம்போக்கி ஆற்றிலும், முத்துப்பேட்டையில் பாமணி ஆற்றிலும் கரைக்கலாம். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி, விநாயகர் சிலைகளை கரைத்து, சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என அந்த செய்திக் குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.