திருவாரூர்

துப்புரவுப் பணியாளர் ஸ்டிரைக் வாபஸ்: மன்னார்குடியில் குப்பைகள் அகற்றம்

30th Aug 2019 07:12 AM

ADVERTISEMENT

மன்னார்குடி நகராட்சியில் தனியார் துப்புரவுப் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், நகரின் பிரதான சாலைகளில் குப்பைகள் அகற்றப்படாமல் கிடந்தது குறித்து தினமணியில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் தனியார் துப்புரவுப் பணியாளர்களிடம் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அவர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று, பணிக்குத் திரும்பினர்.
மன்னார்குடி நகராட்சிக்குள்பட்ட 33 வார்டுகளிலும் தினமும் குப்பைகளை அகற்றும் பணியில், நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் 75 பேரும், தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக துப்புரவுப் பணியாளர்கள் என 94 பேர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
 இந்நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு மன்னார்குடி வருவாய் வட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது ஏற்றுக்கொண்டபடி தனியார் ஒப்பந்த பணியாளர்களுக்கு இ.பி.எப். சேவைக்காக தினமும் ரூ.30 வழங்க வேண்டும் என்ற முடிவை  நகராட்சி நிர்வாகம் இது நாள் வரை வழங்காததைக் கண்டித்தும், தூய்மை பாரத திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை துப்புரப் பணிக்கு புதிய நடைமுறைகளை கொண்டு வந்திருப்பதால் வேலைப் பளு அதிகமாக ஏற்படுவதாகவும், இதை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் செவ்வாய்க்கிழமை முதல் தனியார்துப்புரவுப் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால், நகரின் பல்வேறு இடங்களிலும் குப்பைகள் அகற்றப்படாமல் மூட்டை மூட்டைகளாக சாலையோரத்தில் குவிக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து, தினமணி நாளிதழில் வியாழக்கிழமை செய்தி வெளியானது.
இதைத்தொடர்ந்து, தனியார் துப்புரவுப் பணியாளர்களின் பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாநிலத் தலைவர் என். பாலசுப்பிரமணியன், சிஐடியு கௌரவத் தலைவர் ஜி. ரகுபதி ஆகியோருடன் நகராட்சி நிர்வாகம் வியாழக்கிழமையே பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், நகராட்சி ஆணையர்(பொ) கோ. இளங்கோவன், சுகாதார ஆய்வாளர்கள் ஜி. ராஜேந்திரன், நகர அமைப்பு ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இப்பேச்சுவார்த்தையின்போது, தனியார் நிறுவன ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்களுக்கு உடனடியாக இ.பி.எப். சேவையை நடைமுறைப்படுத்த வேண்டும். அனைவருக்கும் அடையாள அட்டைகள் உடனடியாக வழங்க வேண்டும்.
புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மைப் பணியை தினமும் காலை, மாலை என பிரித்து மொத்தம் 8 மணி நேரம் வேலை என வரையறுக்க வேண்டும். ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு நகராட்சி நிர்வாகம் கொண்டு செல்ல வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தனியார் துப்புரவுப் பணியாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டன. 
இந்தக் கோரிக்கைகளை நகராட்சி நிர்வாகம் ஏற்றுக்கொண்டதையடுத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவன துப்புரவுப் பணியாளர்கள் உடனடியாக போராட்டத்தை வாபஸ் பெற்று, வியாழக்கிழமை அன்றே பணிக்குத் திரும்பினர். இதையடுத்து, ஆங்காங்கே குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டு, தரம் பிரிக்கும் இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இப்பிரச்னைக்கு உடனடி தீர்வுகாண வழிவகுத்த தினமணி நாளிதழுக்கு தனியார் நிறுவன துப்புரப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள்
நன்றி தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT