திருவாரூர்

முதலமைச்சர் சிறப்பு குறைதீர் முகாம்: ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

29th Aug 2019 06:58 AM

ADVERTISEMENT

திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் பகுதியில் நடைபெற்ற சிறப்பு மக்கள் குறைதீர் முகாமில், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
அடியக்கமங்கலம் ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற, சிறப்பு முதலமைச்சர் குறைத்தீர்க்கும் முகாமில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு விவரம்:
அடியக்கமங்கலம் பகுதியிலுள்ள அனைத்து வாய்க்கால்கள், குளங்களைத் தூர்வார வேண்டும். சாக்கடை கழிவுநீர், ஆக்கிரமிப்பு போன்றவைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வாய்க்கால்கள் மற்றும் குளங்களில் மழைநீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்த வேண்டும். மேலத் தெருவில் உள்ள அங்கன்வாடி கட்டடத்தை சீரமைக்க வேண்டும். இந்த ஊராட்சி அதிக மக்கள் தொகை கொண்டதாக இருப்பதால், குப்பைகள் அள்ள சிறிய டிராக்டர் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறையின் தரைதளம் முற்றிலும் பழுதடைந்த நிலையில் மாணவ, மாணவிகள் மண் தரையில் அமரக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது. எனவே, புதிய தரை தளம் அமைக்க வேண்டும். புதிய வகுப்பறை கட்டித் தரவும், சுற்றுச்சுவர் கட்டவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
 ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்கும் வகையில், வாரத்துக்கு 3 நாள் கால்நடை மருத்துவர் வந்து மருத்துவம் பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் விளையாடும் வகையில், விளையாட்டு பூங்கா, உடற்பயிற்சி மையம் அமைக்க வேண்டும். முதியவர்களுக்கு முதியோர் உதவி தொகை சரியாக வழங்கவும், நியாயவிலைக் கடையில் பொருள்கள் சரியாக, முறையாக வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித்தரவும், பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்க மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனு அளிக்கப்பட்டது.
சவளக்காரனில்...
மன்னார்குடி, ஆக. 28 : மன்னார்குடியை அடுத்த சவளக்காரனில் சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் புதன்கிழமை  நடைபெற்றது. 
பாமணி தொடக்க கூட்டுறவு சங்க இயக்குநர் எஸ். பாப்பையன், ஊராட்சி முன்னாள் தலைவர்கள் ஜி.ரவிச்சந்திரன் ஆகியோர் முகாமைத் தொடங்கி வைத்தனர். மன்னார்குடி வருவாய் தனி வட்டாட்சியர் (நகர நிலவரித் திட்டம்) பா.ஸ்ரீராம் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று கொண்டார்.
இதில், 140 மனுக்கள் அளிக்கப்பட்டன. பெரும்பாலும் வீட்டுமனைப் பட்டா, சாலை, குடிநீர், மின் வசதி கோரியும், பட்டா பெயர் மாற்றம், குடும்ப அட்டை போன்ற அடிப்படை வசதிகள் கோரியும் மனுக்கள் அளிக்கப்பட்டிருந்ன.
 நிகழ்ச்சியில், வருவாய் ஆய்வாளர் ஆர். மனோகரன், வேளாண்மை உதவி அலுவலர் டி.பாலமுருகன், கிராம நிர்வாக அலுவலர் எஸ். சூர்யா, ஊராட்சி செயலர் என்.பாஸ்கர், கிராம உதவியாளர் உஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT