நன்னிலம் வட்டம், பேரளத்தில் பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வெள்ளேரிதோப்பு தார்ச்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பேருந்து நிலையம் அருகிலுள்ள உயர்மின் கோபுர விளக்கை சரி செய்ய வேண்டும். பேரளம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியைச் சுற்றி சுவர் எழுப்ப வேண்டும். துப்புரவுப் பணிகளை ஒழுங்குபடுத்த வேண்டும். பேரளம் புதுத்தெரு, மேலத்தெரு, நீலத்தோப்புக் கழிவறைகளைப் புதுப்பிக்க வேண்டும், பேருந்து நிலைய கட்டண கழிப்பிடத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் நகரக்குழு செயலாளர் ஜி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். திமுக நகரச் செயலாளர் எஸ்.தியாகு, முன்னாள் மாவட்டத் துணைச் செயலாளர் பி.செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலர் தீன.கெளதமன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் எஸ். செந்தில், விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ஜெ.ராமமூர்த்தி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இந்நிலையில், பேரூராட்சியின் செயல் அலுவலர் மற்றும் ஆய்வாளர்கள் கோரிக்கைகளை 15 நாள்களுக்குள் நிறைவேற்றித் தருவதாக எழுத்து மூலம் அளித்த உறுதிமொழியை ஏற்று ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.