டேராடூனில் உள்ள ராஷ்டிரீய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் 8-ஆம் வகுப்பு சேர்வதற்கு செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
டேராடூனில் உள்ள ராஷ்டிரீய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில், ஜூலை 2020-இல் 8 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர் 1.7.2020 அன்று பதினொன்றரை வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் (2.1.2007-க்கு முன்னதாகவும் 1.1.2009-க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக்கூடாது) இருக்க வேண்டும். அதாவது 1.7.2020-இல் 7-ஆம் வகுப்பு படித்து கொண்டிருப்பவராகவோ அல்லது முடித்தவராகவோ உள்ள மாணவர்கள் இச்சேர்க்கைக்கு
விண்ணப்பிக்கலாம்.
தகுதித் தேர்வுக்கான, விண்ணப்பம், தகவல் தொகுப்பு மற்றும் முந்தைய தேர்வுக்கான வினாத்தாள் தொகுப்பை பொதுப்பிரிவினர் ரூ. 600-க்கும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் ஜாதிச்சான்றுடன் ரூ. 555-க்கும் THE COMMANDANT, RIMC, DEHRADUN எனும் பெயரில் எஸ்பிஐ வங்கி கிளையில் மாற்றத்தக்க வகையில் கேட்பு காசோலை பெற்று, THE COMMANDANT, RIMC, DEHRADUN-248003, uttarakhand state என்ற முகவரிக்கு விரைவு அஞ்சல் வாயிலாக எழுத்து மூலம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பம் பெறப்பட்ட பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பம் இரட்டை பிரதிகளில் தேர்வு கட்டுப்பாடு அலுவலர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், சென்னை-3 என்ற முகவரிக்கு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விபரங்களை, www.rimc.gov.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்பு கட்டடத்தில் இயங்கும் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ (04366 290080) தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.