சட்டவிரோதமாக மணலைக் குவித்து வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வலங்கைமான் வட்டாட்சியர் எச்சரித்துள்ளார்.
வலங்கைமான் தாலுக்காவில் இனாம்கிளியூர், உத்தாணி, லாயம் உள்ளிட்ட பல இடங்களில் குடமுருட்டி ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக மணலை அள்ளி ஆற்றின் கரையோரங்களில் உள்ள பட்டாதாரர்களின் நிலங்களில் குவித்து வைத்திருந்தனர். தகவலறிந்த வலங்கைமான் வட்டாட்சியர் இன்னாசிராஜ், துணை வட்டாட்சியர் வெங்கடேசன் உள்ளிட்ட குழுவினர் அதைக் கண்டறிந்து பொக்லைன் இயந்திரம் மூலம் மீண்டும் ஆற்றுக்குள் மணலைத் தள்ளினர்.
இதைத்தொடர்ந்து, நில உரிமையாளர்கள் சட்டவிதிகளுக்குப் புறம்பாக ஆற்று மணலை பட்டா நிலங்களில் குவித்து வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.