நேரடி விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு உழவு மானியம் வழங்க ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 20-இல் தொடவங்கும். அதை எதிர்கொள்ளும் வகையில் பயிரை வலிமையானதாக முன்னதாகவே வளர்த்தாக வேண்டும்.
இதைக் கருத்தில் கொண்டு, 15 நாள்களுக்கு அனைத்து பாசன ஆறுகளிலும் முழு பாசன கொள்ளளவு நீரை விடுவிக்கும் வகையில், விநாடிக்கு 25,000 கன அடி தண்ணீரை விடுவிக்க வேண்டும்.
நேரடி விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு உழவு மானியம் வழங்க ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதேவேளையில், காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு தற்போது தமிழக அரசால் மேற்கொள்ளப்படும் மேட்டூர் உபரி நீர் பாசன திட்டத்தைக் கைவிட வேண்டும். ராசி மணல் அணை கட்ட பரிசீலிக்க மத்திய அரசே தயாராக இருக்கும்போது தமிழக அரசு உடனடியாக அதற்கான திட்டத்தை முன்மொழிய வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.