ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூரில் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
ஊதிய உயர்வு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களின் பணியிடங்களைக் குறைக்கக் கூடாது, மருத்துவ மேற்படிப்பு முடித்தவர்களை கலந்தாய்வு மூலம் மட்டுமே பணிநியமனம் செய்ய வேண்டும், மருத்துவ மேற்படிப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில் ஏற்கெனவே இருந்த 50 சதவீத இடஒதுக்கீட்டைத் திரும்பக் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. அரசு மருத்துவர்கள் பணியில் இல்லாததால், மருத்துவமனை பிரிவுகள் பெருமளவு கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும், அரசு மருத்துவர்கள் போராட்டம் காரணமாக, புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்கு வந்திருந்தவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.