தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கம் திருச்சி மண்டலம் சார்பில், மின்வாரியத்தில் பணியாற்றும் பொறியாளர்களுக்கு மனஅழுத்தம் மேலாண்மை பயிற்சி, அண்மையில் மன்னார்குடியில் நடைபெற்றது.
பயிற்சிக்கு, மாவட்ட கிளைத் தலைவர் ந. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட கிளைச் செயலர் க. ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, திருமக்கோட்டை எரிவாயு மின் சுழலி மேற்பார்வை பொறியாளர் க. சம்பத் மஹாராஜா கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார்.
பொறியாளர் சங்கத்தின் திருச்சி மண்டலச் செயலரும், தேசியப் பயிற்சியாளருமான சா. சம்பத் மற்றும் ஜேசிஐ அமைப்பின் பயிற்சியாளர்கள் வி. கருணாகரன், வீ. காந்தி லெனின் ஆகியோர் கலந்து கொண்டு மன அழுத்த மேலாண்மை எனும் தலைப்பில் பயிற்சி அளித்தனர்.
இதில், மன அழுத்தம் எல்லோருக்கும் தேவையான ஒன்றுதான். ஆனால் அது அளவுக்கு மிகாமல் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான், நமது உடல், மனம், உயிர் மூன்றும் சீராக இயங்கும். மேலும், பணியில் சிறப்பாக செயல்பட முடியும். மன அழுத்தம் ஏற்பட காரணங்களான பணியிடம் மற்றும் குடும்பம் இரண்டிலும் சம நிலையில் ஒருவர் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். மன அழுத்தத்துக்கு அலுவலகத்தில் வேலைப்பளு, குடும்பப் பிரச்னைகள், கோபம், பேராசை, தாழ்வு மனப்பான்மை, தீய குணங்கள் ஆகியன முக்கிய காரணங்களாகும். இவைகளை சீராய்வு செய்து தேவையில்லாத குணங்களை விட்டுவிட்டு, நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு செயல்பட்டால் வெற்றி பெறலாம்.தினமும் மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என்று விளக்கப்பட்டது. தொடர்ந்து, மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மூச்சுப் பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமில், திருச்சி மண்டலத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மின் பொறியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.