மின்தடை குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பதில், மின்வாரிய அலுவலர்கள் அலட்சியமாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.
நன்னிலம் வட்டத்தில் நன்னிலம், நீலக்குடி,பேரளம், அதாம்பாவூர் மற்றும் வேலங்குடி ஆகிய இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்புப் பணிகளுக்காக மின்விநியோகம் நிறுத்துவது வழக்கம். இத்தகவலை, பொது மக்களுக்கு தெரிவிக்க பத்திரிகைகள் ஒரு சாதனமாக விளங்குகிறது. இதை மின்வாரிய அலுவலர்கள் தெரிந்தும் அலட்சியமாக உள்ளனர். மின்தடை குறித்து பொதுமக்களுக்கு முதல் நாள் தகவல் தெரிவித்தால் தான், மின்நிறுத்த நாளில் அதற்கேற்ற வகையில் தங்களை தயார்படுத்திக் கொள்ள முடியும் என்பதை பலமுறை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பல்வேறு நிலை அலுவலர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டும் எந்தப் பயனும் இல்லை. மின்தடை குறித்த அறிவிப்பை முதல் நாள் தான் பத்திரிகைகளுக்கு வழங்குகிறார்கள். இதனால், மின்தடை செய்யப்படும் அன்று தான் பொதுமக்கள் பத்திரிகை மூலம் செய்தியை அறிய முடிகிறது.
எனவே, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அதிகாரிகள் 2,3 நாள்களுக்கு முன்பே பத்திரிகைகளுக்கு தகவலை அனுப்பினால் தான், அந்த தகவல் உரிய நேரத்தில் பொதுமக்களுக்கு சென்று சேர்ந்து உரிய பலனை பெறமுடியும். இதற்கேற்றபடி மின்வாரிய உயரதிகாரிகளின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையப் பொதுச் செயலரும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நுகர்வோர் ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினருமான எஸ். ரமேஷ் கூறியது: பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் மின் தடை பற்றிய அறிவிப்பை முன்னதாக வழங்க வேண்டுமென தெரிவித்திருந்தும் அதிகாரிகள் மெத்தனமாக இருக்கின்றனர்.
மின் தடை பற்றிய அறிவிப்பு பொதுமக்களுக்கு ஒருநாள் முன்னதாகவே தெரிந்தால்தான் அவர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள முடியும். அதிகாரிகள் இதில் ஏன் மெத்தனமாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
ஒவ்வொரு மாதத்தின் மின்தடை பற்றி முன்கூட்டியே ஒப்புதல் பெற்று விடுகின்றனர். பின்னர் ஏன் பத்திரிகைகளுக்கு தாமதமாக அறிவிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.