திருவாரூர்

மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்: புதிய கட்டடம் கட்டப்படுமா?

27th Aug 2019 07:52 AM | சிவா. சித்தார்த்தன்

ADVERTISEMENT

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடிஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு, மேற்கூரை பெயர்ந்து விழுகிறது. எனவே, இக்கட்டடத்தை இடித்துவிட்டு வேறு இடத்தில் புதிய கட்டடம் கட்ட வேண்டும் என அலுவலர்கள், பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 மன்னார்குடி கடந்த 1961-ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றியமாக தரம் உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, கீழவடம்போக்கித் தெருவில் 1967-ஆம் ஆண்டு ஒன்றிய அலுவலகம் கட்டப்பட்டு அதில் அலுவல் பணிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஒன்றியத்தில் 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களும், 22 ஒன்றியக்குழு உறுப்பினர்களும் உள்ளனர். 51 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இந்த அலுவலக வளாகத்தில், வட்டார ஊராட்சி, கிராம ஊராட்சி, பொது சுகாதாரம், சத்துணவு, சமூகநலம், தணிக்கை, ஊராட்சிகள், 100 நாள் வேலைத் திட்ட அலுவலகங்கள், பொறியியல், வட்டார திட்ட செயலாக்க அலுவலகம், வட்டார பொது சேவை மையம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 60-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியாற்றுகின்றனர்.
 ஒன்றிய அலுவலகம் கட்டப்பட்டு 52 ஆண்டுகளுக்கு மேலாவதால், கட்டடத்தின் பல்வேறு இடங்களில் விரிசல் விழுந்தும், மேற்கூறை சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுவதும் வாடிக்கையாகிவிட்டது. மழைக்காலங்களில் அலுவலகப் பிரிவையும், மகளிர் சுயஉதவிக்குழு பயிற்சி அரங்கையும் இணைக்கும் பகுதியில் அகலமான அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், மழைநீர் கசிவு ஏற்படுகிறது.
 தரையில் ஓடை போல் தண்ணீர் ஓடும் நிலை ஏற்படுவதால் அலுவலகப் பணிகள் பாதிப்படைவதுடன், ஆவணங்கள், கோப்புகளைப் பாதுகாப்பாக வைக்க முடியாமல் அலுவலர்கள் அவதிப்படுகின்றனர். 
 மேலும், ஒன்றியக் குழு கூட்டம் நடைபெறும் கூட்ட அரங்கத்தின் மேல்தளம் முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால், கடைசி ஆறு ஆண்டுகளாக சுய உதவிக்குழு பயிற்சி அரங்கத்தில் கூட்டம் நடைபெறும் நிலை ஏற்பட்டது. மேலும், ஒன்றிய அலுவலகத்துக்கு மனு அளிப்பதற்காக மகளிர் சுய உதவிக்குழுவினர், மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சி அலுவலர்கள், ஒப்பந்ததாரர்கள் என அன்றாடம் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
மேலும் கட்டுமானப் பொருள்கள், சத்துணவுக் கூடத்துக்குத் தேவையான சமையல் பாத்திரங்களை இருப்பு வைக்க குடோன் வசதி இல்லாததால், அவற்றை ஒன்றிய அலுவலக வளாகத்திலேயே போட்டு வைத்துள்ளனர். இதனால், அலுவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. 
கடந்த 2006-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மன்னார்குடி ஒன்றியக்குழுத் தலைவராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ப.பாஸ்கரவள்ளி இருந்த காலத்தில் ஒன்றிய அலுவலக கட்டம் பழுதடைந்துள்ளதை சுட்டிக்காட்டி மாநில அரசின் நிதியிலிருந்து புதிய கட்டடம் கட்ட கருத்துரு அனுப்பியதை அடுத்து, நில அளவீடு செய்யப்பட்டதில், அரசு கோரும் தேவையான அளவு இடம் இல்லாததால் புதிய கட்டடம் கட்டும் பணிக்கான ஒப்புதலைப் பெற முடியவில்லை எனக் கூறப்பட்டது. பின்னர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவை சேர்ந்த த. உதயகுமாரி தலைவராக பதவியேற்றது முதல், புதிய கட்டடம் அமைவதற்கான தொடர் முயற்சிகள் எடுத்து வந்த போதிலும், தேவையான அளவு இடம் இல்லாததைக் காரணம் காட்டி,  புதிய கட்டடம் கட்டும் பணி தடைபட்டது. 
மன்னார்குடி வ.உ.சி. சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சொந்தமான மிகவும் விசாலமான இடத்தில், நீண்டகாலமாக பயன்பாட்டில் இல்லாத பூமாலை வணிக வளாகம் உள்ளது. இங்கு ஊராட்சி  ஒன்றியத்தின் அனைத்து அலுவலகப் பிரிவுகள், கூட்ட அரங்கம், குடோன், சுகாதார வளாகம், வாகன நிறுத்தம் என அனைத்து வசதிகளும் ஒரே வளாகத்தில் அமையும் வகையில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட  அனுமதியையும், தேவையான நிதியைத் தாமதமின்றி தமிழக அரசிடமிருந்து பெற்றுத் தர மாவட்ட நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT