சம்பா சாகுபடிக்கு முறைவைக்காமல் தண்ணீர் விட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் அதிகாரம் அமைப்பின் தஞ்சை மண்டலக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதற்கான தீர்மானத்துடன் இதர தீர்மானங்கள்.
கல்லணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கடைமடை வரை தாராளமாக செல்ல முறைவைக்காமல் தண்ணீர் திறந்துவிட வேண்டும், வாய்க்கால், ஏரி, குளங்களை உடனடியாக போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும், தரமான விதை, உரங்கள் மற்றும் இதர இடுபொருள்களை வேளாண் துறை அலுவலர்கள் தங்களது பொறுப்பில் வைத்துக்கொண்டு விவசாயிகளுக்கு விநியோகிக்க வேண்டும், விவசாயிகளுக்கு உரிய பயிர்க்கடன் மற்றும் பழைய காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், திருவாரூரில் இரண்டு பேருந்து நிலையம் இருந்தும், மக்கள் ரயில்வே மேம்பாலத்தில் மழையிலும், வெயிலிலும் நிற்க வேண்டியிருப்பதால், நாகை, வேளாங்கண்ணி, திருத்துறைப்பூண்டி பேருந்துகள் அனைத்தும் பழைய பேருந்து நிலையத்துக்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், விளமல் பகுதியில் உள்ள மதுபானக் கடையால் பொதுமக்களுக்கு பல இன்னல்கள் ஏற்படுவதால், அந்த கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அமைப்பின் குடந்தை ஒருங்கிணைப்பாளர் ஜெயபாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநிலப் பொருளாளர் காளியப்பன், தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் தங்க. சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.