திருவாரூர்

"அரசு அலுவலர்கள்போல் விவசாயிகளும் ஓய்வூதியம் பெறலாம்'

27th Aug 2019 07:50 AM

ADVERTISEMENT

அரசு அலுவலர்கள் ஓய்வூதியம் பெறுவதுபோல், விவசாயிகளும் பிரதம மந்திரி ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியம் பெறலாம் என வலங்கைமான் வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிரதம மந்திரியின் ஓய்வூதியத் திட்டம் சிறு மற்றும் குறு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும் உழைக்கும் விவசாயிகள் தள்ளாத வயதில் தன் கடைசி காலம் வரை யாரையும் நம்பி இருக்காமல் வாழ வழிவகுக்கும் திட்டமாகும். வாரிசுகள் தங்களை உதாசினப்படுத்தும்போதும், உடம்பில் வலுகுறையும் போதும் வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் யாரையும் நம்பி இருக்காமல் தனக்கான தேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்வதற்கு மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் மத்திய அரசின் பங்களிப்போடு ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. விவசாயிகள் முதுமை காலத்தில் மகிழ்வோடும், தன்னம்பிக்கையோடும், சுயமதிப்புடனும் வாழ வழிவகை செய்கிறது இத்திட்டம். திட்டத்தின் சிறப்பம்சங்கள்: 18 முதல் 40 வயது வரையுள்ள விவசாய தொழில் செய்யும் சிறு, குறு விவசாயிகள் மட்டும் இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர்கள் ஆவர். விவசாயிகள் தங்கள் வயதுக்கு ஏற்ப மாதம்தோறும் தொடக்கத்தில் ரூ. 55 முதல் ரூ. 200 வரை என்ன தொகையோ, அதே தொகையை 60 வயது வரை செலுத்த வேண்டும். 61-ஆவது வயது முதல் மாதம்தோறும் வாழ்நாள் முழுவதும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியமாக கிடைக்கும். இத்திட்டம் எல்.ஐ.சி யினால் வழி நடத்தப்படுகிறது. சந்தாதாரர் செலுத்தும் தொகைக்கு நிகரான தொகையை  மத்திய அரசு தங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தி வரும்.
தவணைத் தொகையை சந்தாதாரரின் வங்கிக் கணக்கிலிருந்து மாதாமாதம் தானாக எடுத்துக்கொள்ளப்படும். சந்தாதாரர் மனைவியும் இத்திட்டத்தில் தனிப்பட்ட முறையில் இணைந்து பலன் பெறலாம். இத்திட்டத்தில் இணைந்த சந்தாதாரர் இத்திட்டத்தை தொடர விருப்பம் இல்லையெனில் விலக்கிக்கொள்ளலாம். அவர் செலுத்திய தொகை வட்டியுடன் திரும்பத்தரப்படும் (வங்கி வட்டி விகிதம்). எதிர்பாராதவிதமாக சந்தாதாரர் திட்ட காலத்துக்குள் உயிரிழக்கும்பட்சத்தில் அவரின் மனைவி திட்டத்தை விரும்பினால் தொடரலாம். அவ்வாறு தொடரவிருப்பம் இல்லையெனில் சந்தாதாரர் அது வரை செலுத்திய தொகையை சந்தாதாரரின் மனைவிக்கு வட்டியுடன் திரும்பக் கிடைக்கும்.
சந்தாதாரர் திட்ட காலத்திற்குள் உயிரிழந்து அவருக்கு மனைவி இல்லையெனில் அவர் செலுத்திய தொகையை வட்டியுடன் வாரிசுதாரருக்கு வழங்கப்படும். சந்தாதாரர் திட்ட காலத்துக்குப் பிறகு உயிரிழக்கும் பட்சத்தில் அவரின் மனைவி அல்லது வாரிசுதாரருக்கு திட்ட ஓய்வூதிய பலனில் 50 சதவீதம் அதாவது மாதம் ரூ.1500 வீதம் அவரின் இறுதி காலம் வரை கிடைக்கும். ஏற்கெனவே, பி.எம்.கிசான் திட்டத்தில் இணைந்துள்ள சந்தாதாரர் அத்திட்டத்தின் வங்கிக் கணக்கு வாயிலாகவே பிஎம்.கேஎம்யு திட்ட தவனையில் இணைய முடியும். தவனை தொகையை மாதம், காலாண்டு, அரையாண்டு ஆண்டுக்கு ஒரு முறை என செலுத்தலாம். 
விண்ணப்பிக்கும்போது தேர்ந்தெடுத்த தவணை கால முறையை பின்னர் மாற்றிக்கொள்ளலாம். தவனைத்தொகையை சரியான காலத்தில் செலுத்தாதபட்சத்தில் அதற்கான அபராத தொகையுடன் சேர்த்து செலுத்த வேண்டும். முதல் தவணையை மட்டும் பதிவு மையத்தில் செலுத்த வேண்டும். பின்னர் மாதந்தோறும் நேரடியாக வங்கியில் செலுத்தலாம். சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் பெயரில் நிலம் இருந்தாலும், 40 வயதை கடந்து விட்டது என்றால் தனது குடும்பத்தில் உள்ள மனைவி, மகன், மகள் என அவர்களது பெயரில் இத்திட்டத்தில் இணையலாம். இபிஎப்ஓ,என்பிஎஸ்  - அரசு ஊழியர்கள், வரி செலுத்துபவர்கள் இத்திட்டத்தில் சேர முடியாது.
தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை நகல் (பிறந்த தேதி, மாதம், ஆண்டு இருக்க வேண்டும்). வாரிசுதாரரின் ஆதார் அட்டை (பிறந்த தேதி, மாதம், ஆண்டு இருக்க வேண்டும்). வங்கிக் கணக்கு புத்தகம் (ஐப்எப்எஸ்சி கோட் உள்ள ஏதேனும் ஒரு வங்கி கணக்கு புத்தகம்). மேற்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி விவசாயிகள் அனைவரும் பிரதம மந்திரி ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT