திருவாரூரில் உள்ள விதைப் பரிசோதனை நிலையத்தின் செயல்பாடுகளை, விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றுத்துறை இயக்குநர் க. நெடுஞ்செழியன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
விதைப் பரிசோதனை நிலையத்தில் பெறப்படும் சான்று விதை மாதிரிகள், ஆய்வாளரின் விதை மாதிரிகள் மற்றும் விதை மாதிரிகளின் பரிசோதனை பற்றியும், விதைகளின் தரத்தை நிர்ணயிக்கக் கூடிய முக்கிய காரணிகளான முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை, பிற ரக கலப்பு ஆகியவை கணக்கிடப்படும் முறைகளையும், அவற்றுக்கான ஆய்வக உபகரணங்களின் செயல்பாடுகளையும், பதிவேடுகள் முறையாகப் பராமரிக்கப்படுவதையும் அவர் ஆய்வு செய்தார்.
மேலும், குறித்த நேரத்தில் விதைப் பகுப்பாய்வு முடிவுகளை வழங்கி, விவசாயிகளுக்குத் தரமான விதைகள் கிடைக்க வழிவகை செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது விதை ஆய்வு இணை இயக்குநர் கே.சேகர், துணை இயக்குநர் பி. கல்யாணசுந்தரம், மூத்த வேளாண்மை அலுவலர் ச. கண்ணன், வேளாண்மை அலுவலர் க. புவனேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.