அயோத்தி ராமர் கோயில் பிரச்னையில் இஸ்லாமிய சமூகத் தலைவர்களுடன் பேசி, நடுநிலையோடு தீர்வுகாண முயற்சி மேற்கொண்டவர் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்று பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கூறினார்.
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 85-ஆவது ஜயந்தி உத்ஸவம், மன்னார்குடியை அடுத்துள்ள இருள்நீக்கி கிராமத்தில் மூன்று நாள்கள் நடைபெற்றது. நிறைவு நாளான வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற புகழஞ்சலி நிகழ்ச்சியில் இல. கணேசன் பேசியது:
துறவிகள் வீதிக்கு வரலாமா, மடத்திலேயே அமர்ந்து ஆசிர்வாதம் மட்டும் செய்ய வேண்டும் என விமர்சனங்கள் எழுந்தபோதெல்லாம் அதைப் பற்றி கவலைப்படாமல், இந்து மதத்துக்கு வந்த பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றி கண்டவர் ஸ்ரீ ஜயந்திர சரஸ்வதி சுவாமிகள்.
ஆதிதிராவிடர்கள், மீனவர்களிடம் அன்பு காட்டி அவர்கள் வசிக்கும் இடத்துக்கே சென்று அருளாசி நல்கியவர். அவரது பல கனவுகளை, பிரதமர் மோடி தற்போது நிறைவேற்றி வருகிறார். அயோத்தி ராமர் கோயில் பிரச்னையில் இஸ்லாமிய சமூகத் தலைவர்களுடன் பேசி நடுநிலையோடு தீர்வுகாண முயற்சி செய்தவர் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்றார் அவர்.