திருவாரூர்

நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்களுக்கான மாநில விளையாட்டுப் போட்டி: அமைச்சர் ஆர். காமராஜ் தொடங்கி வைத்தார்

18th Aug 2019 12:48 AM

ADVERTISEMENT


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் 20-ஆவது அனைத்து மண்டலப் பணியாளர்களுக்கு இடையேயான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை, திருவாரூர் மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் சனிக்கிழமை தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் மு. சுதாதேவி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் முன்னிலை வகித்தார். விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து, அமைச்சர் ஆர். காமராஜ் பேசியது:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் 20 ஆண்டுகளாக 33 மண்டலங்களுக்கிடையே மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து மண்டலப் பணியாளர்களுக்கிடையே ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பணியாளர்களின் மனவலிமையை அதிகரிக்கவும், மனஅழுத்தத்தைக் குறைக்கும் வகையிலும் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்போது நிரந்தரப் பணியாளர்களாக 7,500 பேர் பணியாற்றி வருகின்றனர். இப்பணியாளர்களுக்கு கைப்பந்து, கால்பந்து, கபடி, பூப்பந்து இரட்டையர் மற்றும் ஐவர், இறகுப்பந்து ஒற்றையர் மற்றும் இரட்டையர், வலைப்பந்து ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 
பெண் பணியாளர்களுக்கென வலைப்பந்து ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டியும், கடந்த 2018- ஆம் ஆண்டு முதல் எறிப்பந்து போட்டியும் சேர்க்கப்பட்டு, தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இதேபோல், மாற்றுத் திறனாளிகளுக்கு தொலைதூர பந்து எறிதல் போட்டி நடத்தப்படுகிறது.
 அந்தவகையில், 20-ஆவது அனைத்து மண்டல விளையாட்டுப் போட்டிகள், முதன்முறையாக திருவாரூர் மண்டலத்தில் இரண்டு நாள்கள் நடைபெறுகின்றன. இதில் கைப்பந்து, கபடி மற்றும் எறிப்பந்து போட்டிகளில் சுமார் 650 பணியாளர்கள் விளையாட உள்ளனர். 
இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி மண்டலத்தில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1-ஆம் தேதிகளில் பூப்பந்து இரட்டையர் மற்றும் ஐவர், இறகுப்பந்து ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளும், கோயம்புத்தூர் மண்டலத்தில் செப்டம்பர்1 மற்றும் 15- ஆம் தேதிகளில் கால்பந்து, வலைப்பந்து ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டியும், நிறைவாக காஞ்சிபுரம் மண்டலத்தில் தடகளப் போட்டிகள் மற்றும் வெற்றிப்பெறும் வீரர்கள், வீராங்கனைகளுக்குப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. 
எனவே, பணியாளர்கள் உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, எல்லா காலத்திலும் உடல் தகுதியோடு இருக்க வேண்டும்என்றார்.
 நிகழ்ச்சியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பொது மேலாளர் க. சிவசெளந்திரவள்ளி, மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ப. மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர் முருகதாஸ், மாவட்ட விளையாட்டு அலுவலர் மு. முருகுவேந்தன் மற்றும் அரசு அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT