திருவாரூர்

குடிமராமத்துப் பணி: அரசு கூடுதல் செயலர் ஆய்வு

18th Aug 2019 12:47 AM

ADVERTISEMENT

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றுவரும் குடிமராமத்துப் பணிகளை தமிழக பொதுப்பணித் துறை (நீர்வள ஆதார அமைப்பு) அரசு கூடுதல் செயலர் எம். பாலாஜி சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இதில், மன்னார்குடியை அடுத்த தட்டாங்கோவிலில் ரூ. 20 லட்சம் மதிப்பில் அய்யனார் கோவில் வாய்க்கால் 8 கி.மீ. தொலைவுக்கு தூர்வாரப்பட்டுள்ளதையும்,  தட்டாங்கோவில் வாய்க்கால் 4 கி.மீ. தொலைவுக்கு தூர்வாரப்பட்டுள்ளதையும் அரசு கூடுதல் செயலர் பார்வையிட்டு, பாசனதாரர் சங்கத்தாரிடம் பணிகள் மேற்கொள்ளப்பட்ட விதம், இதுவரை செய்துள்ள பணிகளுக்கான தொகை பெறப்பட்டுவிட்டதா எனக் கேட்டறிந்தார். 
 பின்னர், பைங்காட்டூரில் ரூ. 49 லட்சம் மதிப்பில் பைங்காட்டூர் வாய்க்கால், ரெங்கநாதபுரம் வாய்க்கால், ராமபுரம் வாய்க்கால் தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டு, நிறைவு பெற்றுள்ள பணிகளைஅளவீடு செய்தார்.
 இதேபோன்று, பரவாக்கோட்டையில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.19 லட்சம் மதிப்பில் வடவாறு கிளை வாய்க்காலில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி, நீடாமங்கலத்தை அடுத்த பன்னிமங்கலம் கிராமத்தில் ரூ.18.55 லட்சம் மதிப்பில் கோரையாறு இடது கரையில் பாதுகாப்புச் சுவர் அமைக்கும் பணியைப் பார்வையிட்டு, விரைவாக முடிக்குமாறு பாசனதாரர் சங்கத்தாரிடம் அறிவுறுத்தினார். மேலும், இப்பணிகளின் மூலம் பயன்பெறும் விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.
திருத்துறைப்பூண்டியில்...
 திருத்துறைப்பூண்டியில் நடைபெறும் குடிமராமத்துப் பணிகளை அரசு கூடுதல் செயலாளர் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.
திருத்துறைப்பூண்டி அருகே ராயநல்லூர் முள்ளியாற்றில் இருந்து பிரியும் மேட்டுப்பாளையம் தலைப்பு வாய்க்காலில் ரூ. 18 லட்சம் மதிப்பில் நடைபெறும்  மதகுப் பணியையும், ரூ. 20 லட்சம் மதிப்பில் தட்டாங்கோவில் அய்யனாறு வாய்க்கால் பகுதியில் நடைபெறும் தூர்வாரும் பணி மற்றும் ராமாபுரம் வாய்க்கால் தூர்வாரும் பணிகளையும் பொதுப்பணித் துறை கூடுதல் செயலாளர் பாலாஜி ஆய்வு செய்து, விவசாயிகளிடம் குறைகள் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது, அரசு கூடுதல் செயலருடன், வெண்ணாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) கண்ணன், உதவி செயற்பொறியாளாகள் கண்ணப்பன், இளங்கோ உள்ளிட்டோர்உடனிருந்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT