திருவாரூர்

திருவாரூரில் சுதந்திர தின விழா: ரூ. 10 லட்சத்தில் நல உதவிகள்

16th Aug 2019 07:28 AM

ADVERTISEMENT

திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  வியாழக்கிழமை நடைபெற்ற 73-ஆவது சுதந்திர தின விழாவில் ஆட்சியர் த. ஆனந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, 88 பயனாளிகளுக்கு ரூ. 10 லட்சத்து 15 ஆயிரத்து 778 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் 15 பேருக்கு சால்வை அணிவித்து கெளரவித்தார். சிறப்பாக பணிபுரிந்த 38 காவல் துறையினர்களுக்கும், 240 அரசு அலுவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
 தொடர்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு டாப்செட்கோ மூலம் ஆழ்துளை கிணறு அமைக்க மானியமாக தலா ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான காசோலை, 28 பயனாளிகளுக்கு தலா ரூ.3 ஆயிரத்து 350 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்கள், 3 பயனாளிகளுக்கு தலா ரூ. 5 ஆயிரத்து 18 மதிப்பிலான விலையில்லா சலவைப் பெட்டிகள், மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.92 ஆயிரத்து 500 மதிப்பிலான உதவி உபகரணங்கள், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் 4 மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கு ரூ.22 ஆயிரத்து 600 மதிப்பிலான உதவி உபகரணங்கள், வேளாண்மைத் துறை சார்பில் பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றி பெற்ற 6 பேருக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான பரிசுகள், தோட்டக்கலைத் துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு கஜா புயுல் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் ரூ.16 ஆயிரத்து 750 மதிப்பிலான இடுபொருள்கள், மீன்வளத்துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.78 ஆயிரத்து 324 மதிப்பிலான படகு வெளி பொருத்தும் இயந்திரங்கள், வருவாய்த் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு தலா ரூ.1000 மதிப்பிலான முதியோர் உதவி தொகைக்கான ஆணை,  6 பயனாளிகளுக்கு தலா ரூ.1000 மதிப்பிலான விதவையர் ஓய்வூதிய உதவித் தொகைக்கான ஆணை, 2 பயனாளிக்கு தலா ரூ.1000 மதிப்பிலான மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதிய உதவித் தொகைக்கான ஆணை, 2 பயனாளிகளுக்கு ரூ. 18,000 மதிப்பிலான திருமண உதவித் தொகைக்கான காசோலை, 5 பயனாளிகளுக்கு ரூ.10,705 மதிப்பிலான கல்வி உதவிக்தொகைக்கான காசோலை என மொத்தம் 88 பயனாளிகளுக்கு ரூ. 10 லட்சத்து 15 ஆயிரத்து 778 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சேந்தமங்கலம் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசும், சேமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இரண்டாம் பரிசும், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மூன்றாம் பரிசும் பெற்றன. பின்னர், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் நட்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். துரை, மாவட்ட வருவாய் அலுவலர் செ. பொன்னம்மாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட அலுவலர் ஸ்ரீலேகா, வருவாய் கோட்டாட்சியர்கள் முருகதாஸ், புண்ணியகோட்டி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பூஷ்ணகுமார், இணை இயக்குநர் (சுகாதாரம்) உமா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT