திருவாரூர்

திருநாட்டியாத்தான்குடி கோயிலில் நடவுத் திருவிழா

11th Aug 2019 04:50 AM

ADVERTISEMENT

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரை அடுத்த திருநாட்டியாத்தான்குடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள மங்களாம்பிகை சமேத மாணிக்கவண்ணர் கோயிலில், ஆடி மாத நடவுத் திருவிழா சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. 
டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியை ஆடி மாத கடைசியில் விவசாயிகள் தொடங்குவது வழக்கம். திருநாட்டியாத்தான்குடியில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டபோது மங்களாம்பிகை அம்பாளும், மாணிக்கவண்ணரும் மழை பொழிய வைத்து, கிராம மக்களோடு வடகிழக்கு மூலையில் வயலில் இறங்கி நாற்று நட்டனர் என்பது ஐதீகம்.
இதை நினைவுகூரும் பொருட்டு ஆண்டுதோறும் இக்கிராமத்தில் நடவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. 
அந்த வகையில், நிகழாண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. 
சனிக்கிழமை காலை கோயிலிலிருந்து தோளில் மண் வெட்டியுடன் மாணிக்கவண்ணரும், கையில் நாற்றுகளுடன் மங்களாம்பிகை அம்மனும் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் வயலுக்குப் புறப்பட்டனர். இதைத்தொடர்ந்து விநாயகர், சண்முகர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளும் வீதியுலா வந்தனர். அம்மன் கோயிலுக்கு எதிரேயுள்ள வயலில் பெண்கள் இறங்கி நாற்று நட்டனர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT