கூத்தாநல்லூர் வட்டத்தில் திருநங்கைக்கான ஓய்வூதியம் கோரி, சமூக நலத்துறை முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஜீவானந்தத்திடம் வெள்ளிக்கிழமை திருநங்கைகள் மனு அளித்தனர்.
இதுகுறித்து திருநங்கை அவந்திகா கூறியது:
குடவாசல் பகுதியைச் சேர்ந்த நான், கூத்தாநல்லூர் வட்டம், தண்ணீர்குன்னம், மணக்கரை பகுதியில் செல்லக்கனி, நதியா, சுபா, கரிஷ்மா மற்றும் நேகா ஆகியோருடன் வாடகை வீட்டில் வசிக்கிறேன். எங்களுக்கு வீடு வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனுக்கள் கொடுத்த போதிலும், இதுவரை வழங்கப்படவில்லை. திருநங்கைகளான எங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அந்த பணம் கே.நதியா என்ற திருநங்கைக்கு வழங்கப்படவில்லை. அதற்கான மனுவை வழங்கியுள்ளோம் என்றார் அவர்.
இதுகுறித்து, வட்டாட்சியர் அலுவலக ஊழியர் ஒருவர் கூறுகையில், திருநங்கைகளுக்கு வீடுகள் வழங்கும் திட்டம் உள்ளது. மேலும், சமூக நலத்துறையின்கீழ் 40 வயதுக்கு மேற்பட்டு, மூன்றாம் பாலின நல வாரியத்தில் பதிவு செய்து, அடையாள அட்டை பெற்ற திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மனு மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.