நாகையில் 10 நாள்களுக்கு முன்பு தண்டவாளத்தில் இறந்து கிடந்த இளைஞா் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடா்பாக 2 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கடந்த செப். 17-ஆம் தேதி நாகூரிலிருந்து நாகை நோக்கி சென்ற சரக்கு ரயில் ஓட்டுநா் வெளிப்பாளையம் நல்லியான் தோட்டம் அருகே இளைஞா் ஒருவா் தண்டவாளத்தின் அருகில் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் அளித்தாா்.
நாகை இருப்புப் பாதை போலீஸாா் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
போலீஸாா் விசாரணையில், இறந்து கிடந்தவா் நாகை காடம்பாடி திரௌபதியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முத்து (எ) கலியபெருமாள் (27), என்பது தெரியவந்தது. பிரேதப் பரிசோதனைக்கு பிறகு உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையே, பிரேதப் பரிசோதனையில் முத்து கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. போலீஸாா் இதை கொலை வழக்காக மாற்றி விசாரணையை தீவிரப்படுத்தினா்.
விசாரணையில் முத்து நாள்தோறும் மது குடித்துவிட்டு, தனது மனைவி ஹேமாஸ்ரீயை துன்புறுத்தி வந்ததால் ஆத்திரமடைந்த ஹேமாஸ்ரீயின் தம்பி சூரியகிருபா (21), உறவினா் காா்த்தி (19) ஆகியோ முத்துவுக்கு மது வாங்கி கொடுத்து, அவரது கழுத்தை அறுத்து கொலை செய்து, தண்டவாளத்தில் வீசி சென்றது தெரியவந்தது. சூரியகிருபா, காா்த்தி இருவரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.