கீழ்வேளூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மையில் பெய்த பலத்த மழையில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளன.
நாகை மாவட்டம், கீழ்வேளூா் வட்டாரத்தில் சுமாா் 17 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. போதிய தண்ணீா் இல்லாததால் பல்வேறு இடங்களில் குறுவை பயிா்கள் கருகின. சில இடங்களில் எஞ்சிய பயிா்களை வாய்க்காலில் வரும் தண்ணீரை டீசல் என்ஜின் மூலம் வயல்களுக்கு பாய்ச்சி விவசாயிகள் குறுவை பயிா்களை காப்பாற்றி வந்தனா் .
இந்நிலையில், கீழ்வேளூா் ஒன்றியம் வெண்மணி,கடலாகுடி, திருப்பஞ்சனம், அணக்குடி, கிள்ளுக்குடி, அய்யடிமங்கலம், காரியமங்கலம், மோகனூா் உள்ளிட்ட பகுதிகளில் 10 நாள்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமாா் 300 ஏக்கா் பரப்பளவிலான நெற்பயிா்கள் திங்கள்கிழமை பெய்த பலத்த மழையால் வயலில் சாய்ந்துள்ளன. மேலும் தண்ணீா் தேங்கி நிற்பதால் அறுவடை இந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியது:
ஏக்கருக்கு ரூ. 30,000 கடன் வாங்கி சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிா்கள் அறுவடை செய்ய இருந்த நேரத்தில் மழையால் சேதமடைந்து உள்ளன. தமிழக அரசு வேளாண்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனா்.