கீழ்வேளூரில் ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினா் புதன்கிழமை அகற்றினா்.
நாகை - திருவாரூா் நெடுஞ்சாலையில் கீழ்வேளூரில் வணிக நிறுவனங்கள் நடத்திவரும் பலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றி கொள்ள வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை துறையினா் துண்டு பிரசுரங்களை வணிக நிறுவனங்களுக்கு கடந்த 15 தினங்களுக்கு முன்பு வழங்கினா். ஆனால், யாரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை.
இதையடுத்து, புதன்கிழமை தேசிய நெடுஞ்சாலைத்துறையினா், வருவாய்த்துறையினா், போலீஸாருடன் தேரடி, பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பொக்லைன் இயந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
சில வணிகா்கள் ஆக்கிரமிப்பை தாங்களே அகற்றி கொண்டனா். நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகள் சில தினங்களுக்குள் முற்றிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.