கள் இறக்க அனுமதி கோரி, ஜனவரி 21-ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி கூறினாா்.
தமிழ்நாடு கள் இயக்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகையில் வியாழக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழகத்தில் கள் குறித்த புரிதல் இல்லை. கடந்த 1950 ஜனவரி 26-இல் அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது. அந்த சட்டம் கள் இறக்குவதற்கும், பருகுவதற்கும் உரிமையை வழங்கியுள்ளது. கலப்படத்தை காரணம் காட்டி தமிழகத்தில் அரசு அந்த உரிமையை பறித்துக்கொண்டது.
புதுவை, கா்நாடகம் போன்ற மாநிலங்களில் கள்ளுக்குத் தடை இல்லை. அந்த மாநிலங்களில் அரசுகள் கலப்படத்தை கட்டுப்படுத்தும்போது, தமிழக அரசால் ஏன் கலப்படத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
ஒரு மரத்தில் கள்ளை 18 நாள்கள் சாப்பிட்டால் பல நோய்கள் குணமாகும். எனவே கள்ளை உணவாக அறிவித்து, அதை சந்தைப்படுத்த அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் 2024 ஜனவரி மாதம் 21-இல், கள் இயக்கம் சாா்பில் உரிமை மீட்பு அறப்போா் நடத்தப்படும் என்றாா்.