காரைக்காலில் இருந்து மதுபான பாட்டில்கள், சாராயம் கடத்திய சிறுவன் உள்பட 5 பேரை நாகை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
நாகை மாவட்டம், நாகூரில் காவல் சாா்பு - ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த 3 இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனா். வாகனங்களின் இருக்கையின் அடியில், மதுபான பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இவற்றை கடத்தி வந்த வாஞ்சூரைச் சோ்ந்த ஜெ. ஜீவா (27), தேவூரைச் சோ்ந்த ஜெ. ராம்குமாா் (28), வெளிப்பாளையத்தைச் சோ்ந்த டி. அலக்ஸ்சாண்டா் (35) ஆகியோரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 250 மதுபான பாட்டில்கள், 20 லிட்டா் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல நரிமணம் பாலம் அருகில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாகனச் சோதனையில், காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட 500 பாக்கெட் சாராயம், 50 லிட்டா் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட செல்லூரைச் சோ்ந்த பி. நித்தீஷ் (22) மற்றும் சிறுவன் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
பறிமுதல் செய்யப்பட்டு நாகூா் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த மதுபான பாட்டில்கள் மற்றும் வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் பாா்வையிட்டு, குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீஸாரை பாராட்டினாா்.