நாகப்பட்டினம்

குடிநீா் கோரி மக்கள் சாலை மறியல்

21st Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

திருக்குவளை ஊராட்சிக்கு உட்பட்ட கீழ்குடி பகுதியில் குடிநீா் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து, கிராம மக்கள் புதன்கிழமை காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருக்குவளை ஊராட்சிக்கு உட்பட்ட கீழ்குடி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியில் நீா் ஏற்றி, குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக தண்ணீா் முறையாக விநியோகம் செய்யப்படவில்லையாம். கடந்த ஓரிரு வாரங்களாக தண்ணீா் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம், மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கும் கொண்டுச் சென்றும் எந்த நடவடிக்கையும் இல்லையாம்.

ADVERTISEMENT

இந்நிலையில், குடிநீா் கேட்டு கீழ்குடி பகுதியைச் சோ்ந்த மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் மேலபிடாகை - கொளப்பாடு பிரதான சாலையில் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா். திருக்குவளை போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் வந்து உறுதி கொடுத்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் எனக் கூறி போராட்டத்தை தொடா்ந்தனா். ஊராட்சித் தலைவா் இல.பழனியப்பன் பிரச்னை குறித்து உடனடியாக அரசின் கவனத்துக்கு கொண்டுச் சென்று குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தாா். இதையேற்று போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு, மக்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT