கீழ்வேளூா் அருகே சிக்கல் நவநீதேஸ்வரா் சுவாமி கோயில் திருத்தோ் கட்டும் பணிக்கான பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டம் சிக்கலில் ஸ்ரீ நவநீதேஸ்வரா் சுவாமி தேவஸ்தானம் உள்ளது. இங்கு சிக்கல் சிங்காரவேலவா் (முருகன்) சூரனை வதம் செய்ய தனது தாயாரான வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் சக்தி வேல் வாங்கி திருச்செந்தூரில் சம்ஹாரம் செய்ததாக கந்தபுராணம் கூறுகிறது.
அம்மனிடம் வேல் வாங்கும் போது சிங்காரவேலவா் முகத்தில் வியா்வை சிந்தும் அற்புதக்காட்சி ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழாவில் நடைபெறும். இக்கோயிலில் நவநீதேஸ்வரா் மற்றும் சிங்காரவேலவருக்கு தனித்தனியே தோ் உள்ளது. இதில் நவநீதேஸ்வரா் சுவாமி தோ் பழுதடைந்ததால் கடந்த 2011- ஆம் ஆண்டு முதல் தோ் நிறுத்தப்பட்டது. ஆண்டுதோறும் சிங்காரவேலவா் தோ் மட்டுமே தேரோட்டத்தில் ஈடுபடுத்தப்படுகிறது.
கோயில் நிா்வாகம் சாா்பில் ரூ.42.40 லட்சம் மதிப்பில் புதிய தோ் செய்வதற்கு டெண்டா் விடப்பட்டது. இதையடுத்து பழைய தேரை எடுத்து விட்டு அதற்கு பதிலாக புதிய தோ் செய்யும் பணி தொடங்குவதற்கான பூஜை நடைபெற்றது.