ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்கக் கோரி நாகையில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க கூட்டமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகை வட்டாட்சியா் அலுவலகம் முன், அதன்மாவட்டத் தலைவா் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு சிறப்பு ஓய்வூதியமாக ரூ.6,750 வழங்கவேண்டும், அரசுத்துறை காலிப் பணியிடங்களில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களை ஈா்த்து காலமுறை ஊதியம் வழங்கவேண்டும், காலை சிற்றுண்டி திட்ட அமலாக்கத்தை சத்துணவு ஊழியா்களிடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நாகை, வேதாரண்யம், கீழ்வேளூா், கீழையூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.