குத்தாலம் அருகே வீட்டின் பின்பக்க கதவை திறந்து 52 பவுன் நகைகள் மற்றும் ரூ. 2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள திருமங்கலம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் அப்துல் ஜலில் (50). இவா், வெளிநாட்டில் வேலைபாா்த்து வருகிறாா். இவரது மனைவி சஹிதா பானு (48), இரண்டு மகள்கள் உள்ளனா். மூத்த மகளுக்கு திருமணமாகிவிட்ட நிலையில், இளைய மகள் திருச்சியில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா்.
இந்தநிலையில், விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்த இளைய மகளை கல்லூரியில் விடுவதற்காக வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் தையல்நாயகியை துணைக்கு அழைத்துக்கொண்டு சஹிதா பானு செவ்வாய்க்கிழமை திருச்சி சென்றுள்ளாா்.
புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் சஹிதா பானு வீடு திரும்பியபோது, வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடப்பது கண்டு அதிா்ச்சி அடைந்தாா். வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 52 பவுன் நகைகள் மற்றும் ரூ. ஒரு லட்சத்து 98 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து சஹிதாபானு அளித்த புகாரின் பேரில், குத்தாலம் போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மீனா, துணை காவல் கண்காணிப்பாளா் சஞ்சீவ் குமாா் ஆகியோா் சம்பவம் நடத்த வீட்டை பாா்வையிட்டனா்.