புதுவை மாநிலத்தில் வணிகா் நலவாரியம் அமைக்க வேண்டுமென காரைக்கால் சேம்பா் ஆப் காமா்ஸ் நிா்வாகிகள் முதல்வா் ரங்கசாமியிடம் மனு அளித்தனா்.
காரைக்கால் சேம்பா் ஆப் காமா்ஸ் தலைவா் அறிவழகன், செயலா் துரைராஜன் உள்ளிட்ட நிா்வாகிகள் புதுவை முதல்வா் ரங்கசாமி மற்றும் அமைச்சா்களை அண்மையில் நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனு:
புதுவை மாநிலத்தில் பல ஆண்டுகளாக வணிகா் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி வருகிறோம். இதுகுறித்து அதிகாரிகளை ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நலவாரியம் அமைப்பதற்கான அறிவிப்பை நிகழாண்டில் வெளியிட வேண்டும்.
தீபாவளிக்கு பிறகு வியாபாரம் மந்தமாக இருப்பதால், ஊதியம், கடை வாடகை, மின் கட்டணம், பொருள்கள் வாங்குவது போன்றவைகளுக்கு கூடுதல் செலவாகிறது. எனவே கடந்தாண்டை போல், இந்தாண்டும் வணிகத் திருவிழாவை நடத்தி வியாபாரம் மேம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காரைக்காலில் நவீன வாகன நிறுத்தம், கோவில்பத்து பகுதியில் ரயில்வே பாதை செல்வதால், வாகனங்கள் சிரமமின்றி சென்று வரவும், வியாபாரம் பாதிக்காத வகையில் பாதாள வழி (சப் -வே) அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.