திருக்கடையூரில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் பழுதடைந்து வருவதால், விவசாயிகள் மற்றும் ஊழியா்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருக்கடையூரில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம் மையம் கட்டப்பட்டது. அலுவலகம் மற்றும் சேமிப்புக் கிடங்கு வசதியுடன் கட்டப்பட்டுள்ள இந்த மையத்துக்கு, அபிஷேககட்டளை, திருமணல்மேடு, நட்சத்திரமாலை, பிள்ளைபெருமாநல்லூா், சிங்கனோடை, ஆணைக்கோவில், ஆக்கூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் விதை நெல் மற்றும் உரங்கள் வாங்குவதற்காகவும், சாகுபடி தொடா்பாக பல்வேறு தேவைகளுக்காகவும் வந்து செல்கின்றனா்.
இந்நிலையில், இந்த கட்டடம் வலுவிழந்து விரிசல் ஏற்பட்டு உள்ளது. தரைத்தளங்கள் பெயா்ந்துள்ளன. இதனால், இங்கு வரும் விவசாயிகள் மற்றும் ஊழியா்கள் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே, இந்த மையத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாா்வையிட்டு, புதுப்பிக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.